சுடச்சுட

    

    இறுதிக்கட்டத் தேர்தல்: மணிப்பூரில் 86%, உ.பி.யில் 60% வாக்குப்பதிவு

    By DIN  |   Published on : 09th March 2017 02:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    voter

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலையொட்டி, ஜான்பூரில்உள்ள வாக்குச் சாவடிக்கு தனது வயதான பாட்டியை சுமந்து செல்லும் இளைஞர்.

    மணிப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்தல்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாக மணிப்பூரில் இதுவரை இல்லாத வகையில் 86 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை வாக்குப்பதிவு 60 சதவீதமாக இருந்தது.
    மணிப்பூர்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கு இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 4-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற அந்தத் தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவாகின.
    இந்நிலையில், இரண்டாம் கட்டமாக தெளபால், உக்ருல், சந்தேல், தமெங்லாங், சேனாபதி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 22 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.
    இதற்காக மொத்தம் 1,151 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.
    தொடக்கம் முதலே வாக்காளர்களின் வருகை விறுவிறுப்பாக இருந்தது. மாநில முதல்வர் இபோபி சிங்கின் தொகுதியான தெளபாலிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்குச் செலுத்தினர்.
    மாலை நிலவரப்படி மொத்தமாக 86 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரிரு இடங்களைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதாகத் தெரிவித்த அவர்கள், சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதாகவும், அதற்குப் பதிலாக வேறு இயந்திரங்கள் வைக்கப்பட்டதாகவும் கூறினர்.
    உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட (ஏழாவது கட்ட) வாக்குப்பதிவு, வாராணசி, காஜிப்பூர், ஜான்பூர், பதோஹி, துத்தி, ராபர்ட்ஸ்கஞ்ச், தக்கியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 40 பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.
    தேர்தலையொட்டி மொத்தம் 14,458 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. துத்தி, ராபர்ட்ஸ்கஞ்ச், தக்கியா உள்ளிட்ட மாவட்டங்கள் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்தவையாக இருப்பதால், அங்கு மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பிற இடங்களில் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இறுதி நிலவரப்படி சம்பந்தப்பட்ட தொகுதிகளில் மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற முதல் ஆறு கட்டத் தேர்தல்களில் முறையே, 64%, 65%, 61%, 61%, 57%, 57% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai