உ.பி.யில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
By DIN | Published on : 09th March 2017 04:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மத்தியப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடையவராகக் கருதப்படும் பயங்கரவாதி லக்னெளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் ஐஜி அஸீம் அருண் புதன்கிழமை கூறியதாவது:
லக்னெளவின் புறநகர்ப் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், போபால் - உஜ்ஜயின் பயணிகள் ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடையவராகக் கருதப்படும் பயங்கரவாதி பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதன்பேரில், பயங்கரவாதத் தடுப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அந்த வீட்டை செவ்வாய்க்கிழமை மாலை சுற்றி வளைத்தனர்.
பயங்கரவாதியை வெளியே வரவழைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகள் உள்ளிட்டவை அந்த வீட்டினுள் வீசப்பட்டன. எனினும், அவர் வெளியே வரவில்லை.
இதையடுத்து, அவருக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கும் அவர் செவிமடுக்காததால், அதிரடிப்படை வீரர்கள் கதவை உடைத்து வீட்டினுள் புகுந்தனர். அப்போது, அந்த பயங்கரவாதி அதிரடிப்படை வீரர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதையடுத்து, வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
சுமார் 12 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை அங்கிருந்த 2 அறைகளையும் சோதனையிட்டபோது, அந்த பயங்கரவாதி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
மேலும் துப்பாக்கி, கத்தி, செல்லிடப்பேசிகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
உயிரிழந்த பயங்கரவாதி ஐஎஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த சைஃபுல்லா என்பவராவார். அவரை உயிருடன் பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அவை கைகூடவில்லை.
முன்னதாக, அந்த வீட்டில் 2 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. எனினும், சோதனைக்குப் பின் ஒரு பயங்கரவாதியின் உடல் மட்டுமே அங்கிருந்து மீட்கப்பட்டது.
போபால் - உஜ்ஜயின் பயணிகள் ரயில் குண்டுவெடிப்பில் அவருடைய தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அஸீம் அருண்.
மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாபூர் மாவட்டத்தில் போபால் - உஜ்ஜயின் பயணிகள் ரயிலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
தேசத் துரோகியின் உடலை வாங்க மாட்டேன் - தந்தை
சைஃபுல்லா குறித்து அவருடைய தந்தை சர்தாஜ் கான்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் கான்பூரில் தான் பிறந்து வளர்ந்தேன். எனது முன்னோர்களும் இங்கு தான் வாழ்ந்தனர். இந்நிலையில், சைஃபுல்லா சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக புதன்கிழமை காலை எனக்கு தகவல் கிடைத்தது. எனினும், தேசத் துரோகி எனது மகனாக இருக்க முடியாது.
நிலையான பணியில் இல்லாத காரணத்தால், சைஃபுல்லாவை முன்பு நான் அடித்தேன். இதையடுத்து, கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் அவர் வீட்டைவிட்டு வெளியேறினார்.
இந்நிலையில், திங்கள்கிழமை சைஃபுல்லா என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, தான் சவூதி அரேபியாவுக்கு செல்வதற்கு நுழைவு இசைவு (விஸா) கிடைத்துள்ளதாகவும், பயணம் மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். அதற்கு, நானும் ஒப்புக்கொண்டேன் என்றார் சர்தாஜ்.
இதனிடையே, சைஃபுல்லாவின் உடலைப் பெற்றுக் கொள்வதற்கு சர்தாஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.