Enable Javscript for better performance
ஏழை மீனவர்கள் அதிநவீன படகுகள் வாங்க ரூ.1 கோடி கடனுதவி: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

  

  ஏழை மீனவர்கள் அதிநவீன படகுகள் வாங்க ரூ.1 கோடி கடனுதவி: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 09th March 2017 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் சிறு மீனவர்கள் அதிநவீனப் படகுகள் வாங்க, ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி புதன்கிழமை அறிவித்தார்.
  யூனியன் பிரதேசமான டையூ மற்றும் டாமனில் உள்ள டையூ நகரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
  சிறிய படகுகளை வைத்திருக்கும் ஏழை மீனவர்களால், ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க முடிவதில்லை. இதனால், அவர்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைப்பதில்லை. அதுபோன்ற மீனவர்கள் அதிநவீன மீன்பிடி படகுகளை வாங்குவதற்காக, ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறோம்.
  இத்திட்டத்தின்படி, மீனவ கிராமங்களில் இருக்கும் ஏழை மீனவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்துக் கொள்ள வேண்டும்; பின்னர், முத்ரா திட்டத்தின்கீழ் அந்தக் குழுக்களுக்கு ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.
  அதன் மூலம் பெரிய மீன்பிடி படகுகள் வாங்கி, அந்தக் குழுவினர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம். பெரிய படகுகளில் 12 நாட்டிகல் மைல் தொலைவுக்கு அப்பால் சென்றுகூட அவர்கள் மீன்பிடிக்க முடியும். ஏழை மீனவர்கள், தனியாக மீன்பிடிக்கச் செல்வதற்கு பதிலாக குழுவாக சென்று மீன்பிடித்து, வருமானத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாம். இத்திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான யோசனைகளை, பொதுமக்கள் அரசிடம் தாராளமாக தெரிவிக்கலாம்.
  சாகர்மாலா திட்டம்: நமது நாட்டிலுள்ள கடற்கரையோரப் பகுதிகளை மேம்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக சாகர்மாலா திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தில் ரூ.8 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவிருக்கிறது.
  மகளிர் தினம்: சர்வதேச மகளிர் தினத்தில் (புதன்கிழமை) டையூ மக்களிடையே நான் உரையாற்றுவதை பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன்.
  நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆண்-பெண் பாலின விகிதத்தில் பெரிய அளவில் வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒரு சில பகுதிகளில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 800 பெண் குழந்தைகள் என்ற அளவில்தான் பாலின விகிதம் இருக்கிறது. இன்னும் சில பகுதிகளில், இது 850, 875 என்ற அளவுகளில் இருக்கிறது. இதனால், நமது சமுதாயத்தில் சமச்சீரற்ற நிலை உருவாகிறது.
  ஆனால், டையூவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1040 பெண் குழந்தைகள் என்ற அளவில் பாலின விகிதம் இருக்கிறது. எனவே, பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று, இந்த மண்ணில் இருந்து பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
  பள்ளிகளில் கழிப்பறைகள்: பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால், பல சிறுமிகள் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, குஜராத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கென கழிப்பறைகள் கட்டும் இயக்கத்தை தொடங்கினோம். அந்த இயக்கம் வெற்றியடைந்தது. அதே நடவடிக்கையை, இப்போது நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறோம்.
  ஏழைகளுக்கும் வங்கிச் சேவை: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஏழைகளுக்கு வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்று கூறி அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்கியது.
  ஆனால், அதன்பிறகும் பல ஆண்டுகளாக ஏழைகளுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்கவில்லை. ஏழை மக்களுக்கு, வங்கிக் கணக்குகள் இல்லாத நிலைதான் நீடித்து வந்தது. ஆனால், இந்த நிலைமையை மாற்றுவதற்காக, நாங்கள் "ஜன்தன்' திட்டத்தை தொடங்கினோம். அதன்படி கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. வங்கிகளை, ஏழைகளுக்கும் சேவை செய்ய வைத்தோம். தற்போது 21 கோடி ஏழை மக்களிடம் "ரூபே' ஏடிஎம் அட்டைகள் உள்ளன.
  ரூ.500 கோடி செலவில் பாலம்: ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், குஜராத் மாநிலம், துவாரகைக்கும், அரபிக் கடலில் அமைந்துள்ள பெட் துவாரகைக்கும் இடையே ரூ.500 கோடி செலவில் பிரமாண்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  பாலத்துக்கான வடிவமைப்பு, இறுதி செய்யப்பட்டு வருகிறது என்றார் பிரதமர் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai