சுடச்சுட

    
    min

    மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை தமிழக அரசு உயரதிகாரிகளுடன் சந்திக்கும் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்,மக்கள் நல்வாழ்வுத் து

     

    மருத்துவப் படிப்புகளில் சேர அடிப்படைத் தகுதியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முறையில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோரிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
    இச்சந்திப்புகள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கே.பி. அன்பழகன் கூறியதாவது:
    பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் நலன் கருதி அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மூலம் நடத்தப்பட்டு வந்த பொதுத் தேர்வுக்குப் பதிலாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதுபோல, முதுகலை பொறியியல் மேல் படிப்பு பயில தற்போது அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டு வரும் மாணவர் சேர்க்கை முறையே போதும்; "கேட்' தேர்வு முறை அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் கேட்டுக் கொண்டோம். இதைத் தொடர்ந்து, "நீட்' தேர்வு முறையில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மாநில அரசின் முயற்சிக்கும் மத்திய அரசின் ஆதரவைக் கோரினோம் என்றார் அன்பழகன்.
    இதைத் தொடர்ந்து, சி. விஜயபாஸ்கர் கூறியதாவது: தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோர வகை செய்யும் இரு மசோதாக்கள் குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, மத்திய சுகாதாரத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளது. இந்த மசோதாக்களின் அவசியம் குறித்து மத்திய அமைச்சர்களிடம் விளக்கினோம். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் உள்பட சுமார் மூன்று லட்சம் பேர் மாநில பாடத் திட்ட அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக தேர்வு எழுதுகின்றனர். அந்த மாணவர்களின் நலன்கள் "நீட்' தேர்வு முறையால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று விளக்கினோம்.
    சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த மூன்றாயிரம் பேரால் மத்திய அரசு தயாரிக்கும் "நீட்' தேர்வை எழுத முடியும். ஆனால், கிராமப்புற மாணவர்கள் திடீரென்று மத்திய அரசு பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப்படும் "நீட்' தேர்வை எதிர்கொள்வதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. "நீட்' தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இதைப் பரிசீலிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
    தமிழகத்தில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அந்த மருத்துவமனை அமையும் இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக விரைவில் முடிவெடுப்பதாகவும், சென்னை வரும் போது அது பற்றி பேசுவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தெரிவித்தார் என்றார் விஜயபாஸ்கர்.
    இது குறித்து தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்குரிய இடங்கள் ஆகியவற்றுக்கு மட்டும்தான் "நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோருகிறோம் என்பதை தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களிடம் விளக்கியுள்ளனர்' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai