சுடச்சுட

  

  பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது: நாடாளுமன்றத்தில் தமிழக பிரச்னைகள் எதிரொலிக்குமா?

  By DIN  |   Published on : 09th March 2017 12:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parliamentofindia


  புது தில்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று காலை தொடங்கியது.

  கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளான இன்று மறைந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  மாநிலங்களவை உறுப்பினர் ஹஜி அப்துல் சலாம் சமீபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து, அவருக்கு இரங்கல் தெரிவித்த பிறகு அவை நடவடிக்கை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  தமிழகத்தில் மீனவர் சுட்டுக் கொலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த வழி வகுக்கும் 3 சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு உள்ளது.

  ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாவது அமர்வில் பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் வரும் 11-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் தாக்கமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஜிஎஸ்டி வரியை ஜூலை முதல் அமலாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு வழிகோல ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி), மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஸ்டி) ஆகிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்தில் தற்போது அரசு உள்ளது.

  எனவே, அவற்றை நிறைவேற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இதைத் தவிர, மகப்பேறு சட்டத் திருத்த மசோதா, கடல்சார் விவகாரங்கள் சட்ட நடைமுறை மசோதா உள்ளிட்டவையும் இந்த அமர்வில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

  அண்மையில் நிறைவடைந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஆக்கப்பூர்வமான அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக, மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையை முடக்கின.

  இந்தச் சூழலில், இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்விலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

  முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால், விவேகத்துடன் செயல்பட்டு ஆக்கப்பூர்வமாக அவையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai