சுடச்சுட

    

    தில்லியில் ஆளும் "ஆம் ஆத்மி' அரசு 2017-18 நிதியாண்டுக்கு ரூ. 48 ஆயிரம் கோடி அளவுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்தது.

    இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கு மேலும் 736 பேருந்துகள் வாங்கப்படவுள்ளது. மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு இலவச முட்டை வழங்கப்படவுள்ளது.
    விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) 25 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைத்து தில்லி பட்ஜெட்டில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், தில்லியிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பின்தங்கிய இடங்களுக்கான விமானக் கட்டணம் குறைகிறது.
    2017-18 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தில்லி சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா புதன்கிழமை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
    "மக்கள் பணம் மக்கள் நலனுக்கே' என்ற கொள்கை அடிப்படையில் பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் சமூகப் பாதுகாப்பு, நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2017-18 நிதியாண்டுக்கான தில்லி நிதிநிலை அறிக்கை ரூ.48,000 கோடி அளவுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 16.5 சதவீதம் அதிகமாகும். இந்த பட்ஜெட்டில் ரூ.7,571 கோடி நிதி தில்லி மாநகராட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 15.8 சதவீதமாகும்.
    தில்லியில் உள்ள தொழிலாளர்களுக்கு 37 சதவீதம் அளவுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்கள் ஆகியோர் கண்ணியத்துடன் வாழும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பள்ளிச் சீருடைக்கான மானியம் அதிகரிக்கப்படுகிறது. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    இத்துடன் இனிமேல் வாழைப்பழம் அல்லது வேக வைத்த முட்டை வழங்கப்படும். கல்வித் துறைக்காக ரூ.11,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 24 சதவீதமாகும்.
    தில்லி முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்டங்களுக்காக ரூ.2,108 கோடி ஒதுக்கப்படுகிறது என்றார் மணீஷ் சிசோடியா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai