ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
By DIN | Published on : 09th March 2017 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பொது விநியோக முறையில் (ரேஷன் கடைகளில்) உணவுப் பொருள்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பொது விநியோக முறையில் மானிய விலையில் உணவுப் பொருள்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை
கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, அஸ்ஸாம், மேகாலயம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் அல்லாமல் மற்ற அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களிலும் இந்த புதிய முறையை அமல்படுத்தியது.
இந்த அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அரசுசாரா அமைப்பு ஒன்று மனு தாக்கல் செய்தது.
அதில், "தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் மானிய விலையில் அளிக்கப்படும் உணவுப் பொருள்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மனுவை புதன்கிழமை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகமும், தில்லி அரசும் பதிலளிக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்பியது.