சுடச்சுட

    

    உ.பி. உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: வாக்குக் கணிப்பு முடிவில் தகவல்

    By DIN  |   Published on : 10th March 2017 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    exit-poll

    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் சில வாக்குக் கணிப்புகள், உத்தரப் பிரதேசத்தில் தொங்கு பேரவை அமையலாம் என்றும் கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கலாம் என்றும் கூறுகின்றன. பஞ்சாபில் ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
    உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் கடந்த இரு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
    அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும், பிரமுகர்களும் அந்த மாநிலங்களில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டனர். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு 5 மாநிலங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக தீவிரமாகச் செயல்பட்டது. அதற்கு சற்றும் சளைக்காமல் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இயங்கின.
    பொதுவாக இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்குக் கணிப்பு வெளியிடப்படுவது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூரில் இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்தது. இருப்பினும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆலப்பூர் தொகுதி சமாஜவாதி வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு மட்டும் வியாழக்கிழமை மறு வாக்குப் பதிவு நடைபெற்றது.
    இதனால் வாக்குக் கணிப்பு நிலவரங்கள், தேர்தல் விதிகளின்படி வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன.
    தேசிய அளவில் அனைத்து தரப்பினரும் முதன்மையாக எதிர்நோக்கியிருப்பது உத்தரப் பிரதேசத் தேர்தலின் முடிவுகளைத்தான். அங்கு பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் மட்டுமே, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர் என்பது நிரூபணமாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதுவே பாஜகவின் சிந்தனையாகவும் உள்ளது.
    ஆனால், வாக்குக் கணிப்பு விவரங்கள் மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஒரு சில முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் மேற்கொண்ட வாக்குக் கணிப்பில் உத்தரப் பிரதேசத்தில் அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், பாஜக ஆட்சியமைக்கும் என வேறு சில நிறுவனங்களின் வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
    பகுஜன் - சமாஜவாதி கூட்டணி? இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், "மதச்சார்புடைய கட்சிகளை மாநிலத்தில் ஆட்சியமைக்க விடாமல் தடுப்பதே எங்கள் குறிக்கோள்' என்றார். அவரது கூற்றுப்படி, ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கலாம் எனத் தெரிகிறது.


    உத்தரகண்ட் (70 தொகுதிகள்)

    செய்தி நிறுவனம் பாஜக காங்கிரஸ் மற்றவை
    நியூஸ் எக்ஸ் 38 30 2
    இந்தியா டுடே 46-53 12-21 1-2
    இந்தியா டிவி-சி வோட்டர் 25-29 29-35 -
    நியூஸ் 24 53 15 2

    வாக்குக் கணிப்பு விவரம்....

    உத்தரப் பிரதேசம் (403 தொகுதிகள்)
    செய்தி நிறுவனம் பாஜக சமாஜவாதி+காங்கிரஸ் பகுஜன் சமாஜ் மற்றவை
    சிஎன்என்-ஐபிஎன் 185 120 90 9
    இந்தியா டுடே 251-279 88-112 28-42 6-16
    ஏபிபி நியூஸ் 164-176 156-169 60-72 2-6
    இந்தியா டிவி-சி வோட்டர் 155-167 135-147 81-93 -
    நியூஸ் எக்ஸ் 185 120 90 8
    டைம்ஸ் நவ் 190-210 110-130 57-74 -

    பஞ்சாப் (117 தொகுதிகள்)

    செய்தி நிறுவனம் அகாலிதளம்+பாஜக காங்கிரஸ் ஆம்ஆத்மி மற்றவை
    நியூஸ் 24-சாணக்யா 9 54 54 -
    இந்தியா டிவி-சி வோட்டர் 5-13 41-49 59-67 0-3
    இந்தியா டுடே 4-7 62-71 42-51 0-2

    கோவா (40 தொகுதிகள்)

    செய்தி நிறுவனம் பாஜக காங்கிரஸ் ஆம்ஆத்மி மற்றவை
    இந்தியா டுடே 18-22 9-13 0-2 1-3
    இந்தியா டிவி-சி வோட்டர் 15-21 12-18 0-4 2-8

    மணிப்பூர் (60 தொகுதிகள்)

    செய்தி நிறுவனம் பாஜக காங்கிரஸ் மற்றவை
    இந்தியா டுடே 16-22 30-36 6-10
    இந்தியா டிவி-சி வோட்டர் 25-31 17-23 9-15

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai