சுடச்சுட

    

    காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டையின்போது தற்செயலாக குண்டு பாய்ந்து ஒரு சிறுவன் பலியானார்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபுரா பகுதியில் அமைந்துள்ள பட்கம்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
    அதன் அடிப்படையில், போலீஸார் அந்தப் பகுதியை புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சுற்றிவளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    அப்போது அடுத்தடுத்து அமைந்துள்ள இரு கட்டடங்களுக்குள் பதுங்கிய 2 பயங்கரவாதிகள், போலீஸாரை நோக்கி வியாழக்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு சுட்டனர்.
    அதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. 9 மணி நேரத்துக்கு நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    முன்னதாக, சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு பயங்கரவாதிகளில் ஒருவரின் தாயாரை அந்தப் பகுதிக்கு அழைத்து வந்து, அவரது வேண்டுகோள் மூலம் அந்த பயங்கரவாதியை சரணடைய வைக்க பாதுகாப்புப் படையினர் முயன்றனர்.
    எனினும், தாயின் வேண்டுகோளை ஏற்று போலீஸாரிடம் சரணடைய அந்தப் பயங்கரவாதி மறுத்துவிட்டார்.
    சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகளின் பெயர்கள் ஜெஹாங்கீர் கனி மற்றும் முகமது ஷஃபி ஷேர்குர்ஜி என தெரிய வந்துள்ளது.
    இந்தச் சண்டையின்போது எதிர்பாரா விதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, அங்கிருந்த அமீர் நாஸிர் வானி என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தார் என்றார் அவர்.
    பயங்கரவாதிகளுடன் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதன் காரணமாகவே அமீர் நாஸிர் வானி குண்டடி பட்டு உயிரிழந்ததாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.
    எனினும், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையின்போது தற்செயலாக குண்டு பாய்ந்துதான் அந்தச் சிறுவன் உயிரிழந்ததாக போலீஸார் கூறினர்.
    இந்தச் சம்பவத்தில் சஜத் அகமது பட் என்ற மற்றொரு இளைஞருக்கு இடுப்பில் குண்டு பாய்ந்து, அவர் எலும்பு இணைப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் பனிஹார் பகுதியிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் ரயில்கள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
    பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு: இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, பாகிஸ்தான் ராணுவப் பொது இயக்குநரை இந்திய ராணுவ பொது இயக்குநர் (நடவடிக்கைகள்) ஏ.கே. பாட்டீயா தொடர்பு கொண்டு, எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி வருவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
    எல்லையில் துப்பாக்கிச் சூடு: இதற்கிடையே, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பாலிருந்து வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும்
    கூறப்படுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai