Enable Javscript for better performance
குறைந்தபட்ச ஊதிய திருத்த மசோதா: தில்லி அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர்- Dinamani

சுடச்சுட

    

    குறைந்தபட்ச ஊதிய திருத்த மசோதா: தில்லி அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர்

    By DIN  |   Published on : 10th March 2017 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலாளர் நலன் சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் தில்லி அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் மீண்டும் திருப்பி அனுப்பினார்.
    இதுகுறித்து, தில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல், பேரவையில் வியாழக்கிழமை கூறியதாவது:
    தில்லி சட்டப்பேரவையில் கடந்த 2015 டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய சட்டத் திருத்த மசோதா, குடியரசுத் தலைவரால் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
    இதுதொடர்பான கடிதம் துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜாலிடம் இருந்து கடந்த 8-ஆம் தேதி கிடைக்கப்பெற்றது. அதில், மறுபரிசீலனைக்காக அந்த மசோதாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பி அனுப்பியதாக அனில் பய்ஜால் குறிப்பிட்டுள்ளார் என்று ராம் நிவாஸ் கோயல் கூறினார்.
    புதிய சட்டத் திருத்த மசோதாவின்படி, குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க மறுப்போருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன், நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்கள் குறித்த விவரங்களை தில்லி அரசு குறிப்பிட்டுள்ள முறையில் தங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    இந்நிலையில், தில்லி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கோபால் ராய் இதுகுறித்து கூறியதாவது:
    தில்லியில் உள்ள தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டே குறைந்தபட்ச ஊதியமானது சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. எனினும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை மீறுவதும், விதிமீறலில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாததுமே மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வந்தது.
    இந்நிலையில் குறைந்தபட்ச ஊதிய சட்டத் திருத்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டது துரதிருஷ்டவசமானது. ஏற்கெனவே ஒரு முறை குடியரசுத் தலைவரால் அது திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் உரிய மாற்றங்கள் மேற்கொண்டு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. எனவே, முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் இதுகுறித்து கலந்தாலோசித்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு மீண்டும் இந்த மசோதா ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்று கோபால் ராய் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai