Enable Javscript for better performance
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க பிரதமர் தலையிட வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

  

  தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க பிரதமர் தலையிட வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 10th March 2017 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aidmk

  தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலைத் தடுக்கவும் மீனவர்களைப் பாதுகாக்கவும் பிரதமர் நரேந்திர மோடி தனி கவனம் செலுத்தி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
  விவாதிக்க கோரிக்கை: இது தொடர்பாக மக்களவையில் அதிமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருவள்ளூர் தொகுதி உறுப்பினருமான டாக்டர் பி. வேணுகோபால் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒத்திவைப்பு நோட்டீûஸ கொடுத்திருந்தனர். இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை காலையில் தொடங்கியதும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் தங்கள் இருக்கை பகுதியில் நின்றபடி குரல் எழுப்பினர். இருப்பினும், அவர்களின் நோட்டீûஸ மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஏற்க மறுத்தார். எனினும், கேள்வி நேர அலுவல் முடிந்த பிறகு நண்பகல் 12 மணிக்கு முக்கிய விவகாரங்களை அவையில் பதிவு செய்யும் நேரத்தில் மீனவர் பிரச்னையை பேச அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது டாக்டர் வேணுகோபால் பேசியதாவது:
  கடந்த மார்ச் 6-ஆம் தேதி ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் பிரட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் நான்கு பேர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர். தனுஷ்கோடி - கச்சத்தீவு அருகே கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
  கடந்த சில காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகமாகி வருகிறது. சென்னையிலும் தில்லியிலும் நடைபெற்ற இரு நாட்டு மீனவர்கள், அதிகாரிகள் நிலையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில், "மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட மாட்டாது' என்று கருத்தொற்றுமை எட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகு பல முறை அந்தக் கருத்தொற்றுமையை மீறி இலங்கை கடற்படை செயல்பட்டது.
  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
  இந்த விவகாரம் தொடர்பாக 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரதமரிடம் அளித்த மனுக்களில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
  ஆனால்,இதுவரை இந்த விஷயத்தில் மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதே விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் பிரதமருக்கு கடந்த 3-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். எனவே, காலதாமதமின்றி உடனடியாக இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனி கவனம் செலுத்தி மீனவர்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாத்து எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றார் வேணுகோபால்.
  இவரைத் தொடர்ந்து, ஆரணி தொகுதி உறுப்பினர் வி.ஏழுமலை பேசுகையில், "மிகவும் கொடூரமாகவும், மனிதாபிமானமற்ற, சட்டவிரோதமான ஈவு இரக்கமற்ற வகையில் தமிழக மீனவரை இலங்கை கடற்படை கொன்றுள்ளது. தென் கடலோர தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கை கடற்படையின் ஏற்றுக் கொள்ள முடியாத இந்தச் செயலைத் தடுத்து இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும்' என்றார்.

  வெளியுறவு இணையமைச்சரிடம் திருச்சி சிவா எம்.பி. கோரிக்கை

  தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.
  இந்த விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
  இதையடுத்து, ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பரிடம் திருச்சி சிவா வியாழக்கிழமை நேரில் அளித்தார். இச்சந்திப்பின் போது மாநிலங்களவை திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உடனிருந்தார்.
  அப்போது திருச்சி சிவா, "இலங்கை கடற்படையின் செயலை எந்த விதத்திலும் சகித்துக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது. இந்த விவகாரத்தில் இந்தியா மிகவும் கடுமையாக இலங்கையிடம் நடந்து கொள்ள வேண்டும். தில்லியில் உள்ள இலங்கை தூதரை இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் அழைத்து தனது கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரச் செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்தியா எச்சரிக்க வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai