சுடச்சுட

    

    நாடாளுமன்றத்தில் நிறைவேறியது எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா

    By DIN  |   Published on : 10th March 2017 11:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.

    49 ஆண்டுகள் பழமையான எதிரி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, கடந்த 2016-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
    இந்த நிலையில், அந்த மசோதா, மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
    அப்போது குறுக்கிட்டுப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ""பல்வேறு காரணங்களுக்காக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல மூத்த உறுப்பினர்கள், அவைக்கு வராததால், இந்த மசோதாவை வேறு ஒரு நாளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
    அவருடைய கோரிக்கைக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுத்தனர். எனினும், அவர்களின் கோரிக்கையை அரசு தரப்பு ஏற்காததால், கோபமடைந்த அவர்கள் ஒட்டுமொத்தமாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    அதையடுத்து, மாநிலங்களவையில் எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா, எவ்வித எதிர்ப்புமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
    அப்போது, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், ஜே.பி.நட்டா, வெங்கய்ய நாயுடு, சுரேஷ் பிரபு, பியூஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர், அனந்த் குமார், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் அவையில் இருந்தனர்.
    பின்னர் மாநிலங்களவையில் இருந்து இறுதி ஒப்புதலுக்காக, மீண்டும் மக்களவைக்கு அந்த மசோதா கொண்டு செல்லப்பட்டது.
    அவசரம் ஏன்?: இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை பாஜக குழுத் தலைவருமான அருண் ஜேட்லி கூறுகையில், ""எதிரி சொத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக பிறப்பிக்க அவசரச் சட்டம், வரும் மார்ச் 14-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது; எனவே, அந்த மசோதா, மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமையே நிறைவேற்றப்பட்டது'' என்று விளக்கம் அளித்தார்.
    திருத்தம் ஏன்?: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு போர்களின்போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் விட்டுச் சென்ற சொத்துகளை பாதுகாப்பதற்கும், நிர்வகிக்கவும், எதிரி சொத்து சட்டத்தை மத்திய அரசு கடந்த 1968-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்நிலையில், அந்த சொத்துகளுக்கு பாகிஸ்தானில் இருப்பவர்கள் உரிமை கோர முடியாத வகையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அந்தச் சொத்துகளை நிர்வகிக்கும் அரசோ அல்லது முகவர்களோ, வேறு எவருக்கும் அந்தச் சொத்துகளை மாற்ற முடியாத வகையிலும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai