சுடச்சுட

    

    பேறுகாலப் பலன்கள் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 10th March 2017 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parliment

    தாய்மை அடைந்த பெண்களுக்கு ஆறு மாதம் பேறுகால விடுமுறை அளிக்க வகை செய்யும் பேறுகாலப் பலன்கள் மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
    நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இதுவரை 12 வாரங்கள், அதாவது மூன்று மாதகாலம் பிரசவக் கால விடுமுறையாக வழங்கப்பட்டு வந்தது. இந்த விடுமுறையை ஆறு மாதங்களாக உயர்த்துவதற்காக பழைய பேறு காலப் பலன்கள் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவானது கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மக்களவையில் நிறைவேற்றப்படாததால் அது சட்டமாகவில்லை.
    இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது, இந்த பேறுகாலப் பலன்கள் சட்டத்திருத்த மசோதாவானது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
    பெண்களுக்கு ஆறு மாதங்கள் பேறுகால விடுமுறை மட்டுமின்றி, மூன்று மாதத்துக்கும் குறைவான வயதுடைய கைக் குழந்தையை தத்தெடுக்கும் பெண்களுக்கும் மூன்று மாதகால விடுமுறை வழங்கும் அம்சமும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
    மேனகா காந்தி பாராட்டு: இதனிடையே, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பேறுகாலப் பலன்கள் மசோதாவை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நாம் புதிய வரலாறைப் படைத்திருக்கிறோம். இந்த மசோதாவால் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைய இருக்கிறார்கள். மேலும், நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கவும் இது உதவும் என்றார் மேனகா காந்தி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai