சுடச்சுட

    

    விவசாயிகள் கடனை ரத்துச் செய்யக் கோரி மகாராஷ்டிர சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள சிவசேனை உறுப்பினர்களும் முதல்முறையாக அமளியில் ஈடுபட்டனர்.
    மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் சிவசேனை கூட்டணியில் உள்ளது. எனினும், பாஜகவுக்கு எதிராக அவ்வபோது சிவசேனை கருத்து தெரிவித்து வருவது வழக்கம். இந்நிலையில், வியாழக்கிழமை கூடிய அந்த மாநில சட்டப் பேரவையில் விவசாயிகள் கடனை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டு சிவசேனை உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
    அந்த மாநில சட்டப் பேரவை புதன்கிழமை தொடங்கியது.
    அன்றைய தினமும் இதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் நடைபெறாமல் முடங்கின.
    அதேபோல், இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அவை அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.
    சட்டப் பேரவை கூடிய உடன், விவசாயிகள் கடனை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது, சிவசேனை உறுப்பினர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அதே கோரிக்கையை வலியுறுத்தினர்.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வரக் கோரி மனு அளிக்குமாறு அவைத் தலைவர் ஹரிபாவ் பக்தே அறிவுறுத்தினார்.
    எனினும், அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயன்றதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
    பின்னர் அவை கூடியதும் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
    அதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai