சுடச்சுட

  

  கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ரூ.1 கோடி அறிவித்த விவகாரத்தை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் மக்களவையில் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
  அப்போது பாஜக உறுப்பினர்களுக்கும், மார்க்சிஸ்ட் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் சிறிது நேரத்துக்கு அலுவல்கள் பாதிக்கப்பட்டன. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, மத்தியப் பிரதேச ஆர்எஸ்எஸ் நிர்வாகியான குந்தன் சந்திராவத், கேரள முதல்வரின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி வழங்குவதாகத் அறிவித்தார். இந்தக் கருத்துக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
  இந்நிலையில், இந்த விவகாரம் மக்களவையில் வியாழக்கிழமை எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பி.கருணாகரன் இதுகுறித்து பேசுகையில், "பாஜக அல்லாத கட்சிகளைச் சேர்ந்த மாநில முதல்வர்களுக்கு இவ்வாறு மிரட்டல் விடுப்பதுதான் மத்திய அரசின் கொள்கையா?' என்று கேட்டார்.
  இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பதிலுக்கு மார்க்சிஸ்ட் எம்.பி.க்களும் குரல் எழுப்பியதால், அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது எழுந்த பாஜக எம்.பி. பர்வேஸ் வர்மா "கேரளத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களில் இடதுசாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்.
  இதற்கு மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி கூச்சல் எழுப்பியதால் அவை அலுவல்கள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai