சுடச்சுட

    

    ம.பி. ரயில் குண்டு வெடிப்பு குறித்து என்ஐஏ விசாரணை: ராஜ்நாத் சிங்

    By DIN  |   Published on : 10th March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RAJNATH2

    மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு; அந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக, மக்களவையில் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால்-உஜ்ஜைன் ரயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் முகமது சைஃபுல்லாவை, உத்தரப் பிரதேச போலீஸார் லக்னெüவில் புதன்கிழமை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
    சைஃபுல்லாவின் உடலை அவரது தந்தை முகமது சர்தாஜ் வாங்க மறுத்ததுடன், ""தேசத் துரோகி எனது மகனாக இருக்க முடியாது'' என்றும் அவர் கூறியிருக்கிறார். சர்தாஜின் தேசப்பற்றைக் கண்டு இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் பெருமையடைகின்றன. (உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்).
    சைஃபுல்லா தங்கியிருந்த இடத்தில் இருந்து 8 துப்பாக்கிகள், 630 தோட்டாக்கள், 3 செல்லிடப்பேசிகள், 4 சிம் கார்டுகள், 3 வயர்லஸ் கருவிகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம், சில வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹோஷங்காபாதில் 3 சந்தேக நபர்களை அந்த மாநில போலீஸார் கைது செய்தனர்.
    கைதான 3 பேரிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்களை உத்தரப் பிரதேச போலீஸாருக்கு அவர்கள் தெரிவித்தனர். அதன்படி, உத்தரப் பிரதேச போலீஸார் துரிதமாக செயல்பட்டு, 3 சந்தேக நபர்களைக் கைது செய்தனர். ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாக, இரு மாநிலங்களிலும் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் அமைப்புகளும், இரு மாநில காவல் துறையும் எப்படி ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் சிறந்த உதாரணமாகும். சரியான நேரத்தில் இரு மாநில போலீஸாரும் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மிகப்பெரிய அசம்பாவிதம் முறியடிக்கப்பட்டுவிட்டது.
    ரயில் குண்டு வெடிப்பு விவகாரம், என்ஐஏ அமைப்பிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai