சுடச்சுட

    

    ரயில்வே செலவினங்களை ஈடுசெய்ய பயணிகள் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும்: சிஏஜி

    By DIN  |   Published on : 10th March 2017 11:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே செலவினங்களை ஈடுசெய்ய பயணிகள் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும் என்று இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி) கேட்டுக்கொண்டுள்ளது.
    ரயில்வே துறை தொடர்பான சிஏஜி ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
    ரயில்வே துறை கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் ரயில்களை இயக்குவதற்கான செலவை ஒப்பிடுகையில், பயணிகள் கட்டணத்தால் வரும் வருவாய் மிகக் குறைவாக இருக்கிறது. எனவே, பயணிகள் கட்டணத்தைக் கொண்டு ரயில் இயக்கச் செலவினங்களை ஈடு செய்வது சாத்தியமற்றதாக உள்ளது.
    கடந்த ஆண்டுகளில் ரயில்வே துறையின் உற்பத்தித் திறன் கடுமையாக சரிந்துள்ளது. எனவே, உற்பத்தித் திறனை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரயில்வே துறை உள்ளது.
    வரவு - செலவு கணக்கில் முறைகேடு: மேலும், ரயில்வே துறையின் வரவு-செலவு கணக்குகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகின்றன. உதாரணமாக, 2010-11-ஆம் நிதியாண்டு முதல் 2014-15-ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும், ரூ.3,548.95 கோடி மதிப்பிலான ரயில்வே கணக்குகளைக் கையாள்வதில் தவறுகளும், முறைகேடுகளும் நடைபெற்றுள்ளன. இந்த முறைகேடுகளை ரயில்வே துறையும் ஒப்புக் கொண்டிருக்கிறது. எனவே, இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    வருவாய் குறைவு: கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் ரயில்வே துறையின் மொத்த வருவாய் 12.43 சதவீதமாக உயர்ந்திருந்தது. எனினும், இது, 2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் எட்டப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் குறைவாகும்.
    இதேபோல், மேற்குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடும்போது, 2014-15-ஆம் நிதியாண்டில் ரயில்வே சரக்குக் கட்டணம் மற்றும் பயணிகள் கட்டணம் மூலமாக கிடைக்கப் பெற்ற வருவாய் மிகக் குறைவாகும். மேலும், இதே நிதியாண்டில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் ரூ.33,821 கோடி நஷ்டம் ஏற்பட்
    டுள்ளது.
    எனவே, ரயில்வே செலவினங்களை ஈடுசெய்ய பயணிகள் கட்டணத்தை முழுமையாக திருத்தியமைக்க ரயில்வே துறை முன்வர வேண்டும். அதேபோல், பயணிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் கணிசமாக குறைப்பதுடன் தேவையற்ற செலவுகளையும் தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai