சுடச்சுட

    

    அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் பொதுநல மனு தாக்கல் செய்ய முடியுமா?

    By DIN  |   Published on : 11th March 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    சர்ச்சைக்குரிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து சத்தீஸ்கர் அரசு சொகுசு ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி "ஸ்வராஜ் அபியான்' அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த மனு தொடர்பாக உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. அதன்படி, மத்திய, மாநில அரசுகள் சார்பில் பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
    இந்நிலையில், இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர், எம்.எம். சந்தானகௌடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதம்:
    ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள், "ஸ்வராஜ் இந்தியா' என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் ஆதாயத்தை எட்டுவதற்காக இதுபோன்ற பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர். அதனை நீதிமன்றங்கள் ஊக்குவிக்கக் கூடாது என வாதாடினார்.
    இதனைக் கேட்ட நீதிபதிகள், "அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கும் அமைப்புகள் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்வதை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்' எனத் தெரிவித்தனர்.
    ஏற்க மாட்டோம் - நீதிபதிகள்: இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மற்றொரு வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், "உள்நோக்கத்துடன் கூடிய மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்காது' எனக் கூறினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai