சுடச்சுட

    

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.க்கள் சிபிஐ விசாரணை கோரியதால் பரபரப்பு

    By DIN  |   Published on : 11th March 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya

    மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.க்கள்.

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுகவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை எழுப்பினர். இதனால், இரு அவைகளும் காலையில் பரபரப்பாகக் காணப்பட்டது.
    மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கியதும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி அளித்துள்ள ஒத்திவைப்பு நோட்டீûஸ ஏற்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டாக்டர் வா. மைத்ரேயன், ஆர்.லட்சுமணன் ஆகியோர் அவையின் மையப் பகுதிக்குச் சென்று குரல் கொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பனர் சசிகலா புஷ்பாவும் மையப் பகுதிக்குச் சென்று குரல் கொடுத்தார்.
    கூச்சல் குழப்பம்: இதற்கு சசிகலா ஆதரவு அதிமுக உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோர் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதனால், அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.
    இதற்கு மத்தியில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அனுமதியுடன் மைத்ரேயன் பேசுகையில், "ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, அவரது உடல்நிலை குறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, லண்டன் மருத்துவர் வெளியிட்ட அறிக்கைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளது. மரணத்தில் சந்தேகம் இருப்பதற்கான முகாந்திரத்தை இதுவே உணர்த்துகிறது. இது குறித்து சிபிஐ அல்லது நீதி விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்' என்றார்.
    பி.ஜே.குரியன் எச்சரிக்கை: முன்னதாக, மைத்ரேயன் பேச முற்பட்டபோது விஜிலா சத்யானந்த் குறுக்கிட்டு, "நாடாளுமன்ற மரபுகளுக்கு புறம்பாக மைத்ரேயன் பேசுகிறார். அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். மிகப் பெரிய தலைவருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் மைத்ரேயன் பேசுகிறார்' என்று குரல் எழுப்பியபடி இருந்தார்.
    இதனால், அதிருப்தி அடைந்த பி.ஜே. குரியன், "நீங்கள் பெண் எம்.பி. ஆக இருப்பதால் அமைதியாக இருக்கிறேன். வேறு யாரேனும் இவ்வாறு ஒழுங்கீனமாகச் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன்' என்று எச்சரித்தார்.
    மக்களவை ஒத்திவைப்பு: மக்களவையில் இதே விவகாரத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியைச் சேர்ந்த நாமக்கல் பி.ஆர். சுந்தரம் உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பி.ஆர்.சுந்தரம் அளித்த அலுவல் ஒத்திவைப்பு நோட்டீûஸ நிராகரிப்பதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
    இதையடுத்து, சத்யபாமா, வனரோஜா உள்ளிட்ட எம்.பி.க்கள் மையப் பகுதிக்குச் சென்று "ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்' என்று குரல் எழுப்பினர். அப்போது அவையில் அதிமுகவைச் சேர்ந்த மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, அக்கட்சியின் குழுத் தலைவர் டாக்டர் வேணுகோபால் உள்ளிட்ட எம்.பி.க்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்களின் கூச்சலைத் தொடர்ந்து, அவை நடவடிக்கை காலை 11.06 முதல் 11.20 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
    வெளிநடப்பு: பின்னர் அவை கூடியதும் இதே விவகாரத்தை ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் எழுப்பியதால் அவர்களை சுமித்ரா மகாஜன் கண்டித்தார். இதையடுத்து, தங்கள் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து பி.ஆர். சுந்தரம் தலைமையிலான எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    அதிமுக தலைமைக்கு எதிரான பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் 10 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
    அவர்களுடன் நாடாளுமன்றத்தில் சசிகலா தலைமையை ஏற்றுள்ள எம்.பி.க்கள் இணக்கமாக உள்ளனர். சசிகலா புஷ்பா நீங்கலாக ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்து செல்லத் தடை ஏதும் இல்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நிகழ்வுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள், கட்சி அலுவலகத்துக்குச் செல்லவில்லை.
    அவர்களை சமாதானப்படுத்தும் வாய்ப்புகளை அதிமுக மேலிடத் தலைவர்கள் ஆராய்ந்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai