சுடச்சுட

    
    Election_UP


    புது தில்லி : 5 மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னதாக வெளியான கருத்துக் கணிப்புகளும், தற்போது வெளியான முடிவுகளையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

    5 மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

    அவற்றில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா நியூஸ், டைம்ஸ் நௌவ், இந்தியா டுடே உள்ளிட்ட 5 ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் ஆணி அடித்தது போல தெரிவித்தன. அதோடு, பாஜக 155 முதல் 279 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டது.

    சில கணிப்புகள் தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்று கூறப்பட்டது.

    ஆனால் முக்கிய ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை அப்படியே நடந்துள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 304 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம், உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    70 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    பஞ்சாப் மாநிலம்

    பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்பட்டது. மொத்தமுள்ள 117 இடங்களில் 32 - 71 இடங்களை காங்கிரஸ் தக்க வைக்கும்என்று இந்தியா டுடே-ஆக்ஸிஸ் கருத்துக் கணிப்பும், ஆம் ஆத்மி 59-67 தொகுதிகளை பிடிக்கும் என்று இந்தியா டிவி-சிவி கணிப்பும் கூறியிருந்தது.

    அதே சமயம், அனைத்துக் கருத்துக் கணிப்புகளுமே பஞ்சாபில் ஷிரோமணி அகாளி தள-பாஜக கூட்டணிக்கு பெருத்த பின்னடைவே ஏற்படும் என்று கூறியிருந்தது.

    அதே போல, காங்கிரஸ் 72 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 26 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக கூட்டணி 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    உத்தராகண்ட் கருத்துக் கணிப்பு

    உத்தராகண்ட் மாநிலத்தைப் பொருத்தவரை இந்தியா டுடே ஆக்ஸிஸ் உட்பட 3 கருத்துக் கணிப்புகளிலும் பாஜகவே வெற்றி பெறும் என்றும், இந்தியா டிவி - சிவிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் இரு கட்சிகளும் 29 - 35 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டது.

    இதில், பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் உண்மையாகியுள்ளது. மலைப் பிரதேசமான உத்தராகண்டில் தாமரை ஆட்சி மலருகிறது. இதில், பாஜக 54 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    மணிப்பூரில் சொன்னதும் நடந்ததும்

    மணிப்பூரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 25 - 31 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், 17-23 தொகுதிகளை காங்கிரஸ் தக்க வைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கி நண்பகல் நிலவரப்படி, மணிப்பூரில் பாஜக 14, காங்கிரஸ் 17, இடதுசாரிகள் 2 என்ற நிலையே நீடிக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது.

    கோவா மகுடம் யாருக்கு?

    40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், பெரும்பாலானவை, பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்றே கூறப்பட்டது. பாஜக 15 - 22 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கனவு பலிக்காது என்றும் கூறப்பட்டது.

    கோவாவில் தற்போது பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும்முன்னிலை வகிக்கின்றன. தொடர்ந்து கோவாவில் இழுபறி நீடிக்கிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai