சுடச்சுட

    

    நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும்: ஓபிஎஸ் அணியினர் உச்ச நீதிமன்றத்தில் மனு

    By DIN  |   Published on : 11th March 2017 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக சட்டப் பேரவையில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து விட்டு, புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
    கடந்த மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
    ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முன்வைத்த கோரிக்கையை அன்றைய தினத்தில் பேரவைத் தலைவர் தனபால் நிராகரித்தார். இதை எதிர்த்து தற்போது பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய அம்சங்களின் விவரம்:
    கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நாள் வரை தனியார் விடுதியொன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேர் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு நேரடியாக சட்டப்பேரவைக்கு அவர்கள் அழைத்துவரப்பட்டனர்.
    இப்படியான தருணத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே சுதந்திரமாக வாக்களிக்க இயலும். அதுதொடர்பாக நாங்கள் விடுத்த கோரிக்கையை பேரவைத் தலைவர் நிராகரித்துவிட்டார்.
    எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் பாரபட்சமாகவும், ரகசிய வாக்குரிமைக்கு எதிராகவும் அவர் செயல்பட்டார். இதன் மூலம், எம்எல்ஏக்களின் கருத்து சுதந்திரத்தை மட்டும் அவர் பறிக்கவில்லை. மாறாக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ரகசிய வாக்குரிமையையும் பேரவைத் தலைவர் வழங்க மறுத்துள்ளார்.
    எனவே, அன்றைய தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறைகளையும், முடிவுகளையும் செல்லாது என அறிவிக்க வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai