சுடச்சுட

    
    supreme_court

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு ஜாமீனில் வரக்கூடிய பிடி ஆணையை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்துள்ளது இந்திய நீதித் துறை வரலாற்றிலேயே இது முதல் முறையாகும்.
    நீதிபதி கர்ணனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே. செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி. லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
    அப்போது, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி ஆஜராகி, "உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிபதி கர்ணன் அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார்' என்று முறையிட்டார்.
    இதையடுத்து, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் பிறப்பித்த உத்தரவில், "நீதிபதி கர்ணனுக்கு ரூ.10 ஆயிரம் சொந்தப் பிணைத் தொகையில் ஜாமீனில் வரக் கூடிய பிடி ஆணை பிறப்பிக்கிறோம். அவரை நீதிமன்றத்துக்கு வரவழைக்க இதைத் தவிர வேறு வழியில்லை. இந்த பிடி ஆணையை செயல்படுத்தி அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 31-ஆம் தேதி நீதிபதி கர்ணன், நீதிமன்றத்தில் ஆஜராவதை மேற்கு வங்க மாநிலக் காவல் துறை தலைமை இயக்குநர் உறுதிப்படுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


    பின்னணி

    சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதிபதி கர்ணன் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், தனது பணியிட மாற்றத்துக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அவர் தானாகவே தடை விதித்தார். இந்தத் தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் அதே நாளில் ரத்து செய்ததுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் கர்ணனுக்கு வழக்குகளை விசாரித்தல் உள்ளிட்ட நீதிமன்றம் தொடர்புடைய பணிகளை வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
    இதையடுத்து, மன உளைச்சலால் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்து விட்டதாக கர்ணன் தெரிவித்தார். இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலான பிறகும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷண் கௌல், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக தற்போது பணியில் உள்ளவர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய புகார்களை கர்ணன் பொது மேடைகளிலும் ஊடகங்களிலும் கூறி வந்தார்.
    இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காகக் கருதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. மேலும், நீதிபதி கர்ணன் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai