சுடச்சுட

    

    பல்கலை.களில் கருத்துச் சுதந்திரம் மீது தாக்குதல்: மாநிலங்களவையில் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கவலை

    By DIN  |   Published on : 11th March 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    left

    பல்கலைக்கழகம், கல்லூரி வளாகங்களில் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றின் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு மாநிலங்களவையில் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
    இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா பேசுகையில், "தில்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சில வலதுசாரி சக்திகள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு யார் தேசியவாதி, யார் தேசபக்தர்? என சான்றளித்து வருகின்றனர். இதனால், உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை கொள்கையால் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதி அக்கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர். தில்லி பல்கலைக்கழகத்தில் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் கட்டுப்பாடு விதிப்பதை எதிர்த்து மாணவர்கள், பேராசிரியர்கள் போராடி வருகின்றனர். இது மாணவர்கள் தொடர்புடைய விவகாரம் மட்டுமின்றி, நாட்டின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையாகும்' என்றார்.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், "நாட்டில் உள்ள பல்கலைக்கழங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் போன்றவை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை. எனவே, பல்கலைக்கழகங்களில் நடக்கும் நிகழ்வுகளில் நமக்கும் பொறுப்பு உண்டு. ஹிந்துத்துவ தேசியவாதம் என்ற பெயரில் இந்திய தேசியவாதத்தை இகழ்ந்து வரும் போக்கு அதிகரித்துள்ளது. சட்டத்தை மீறி, எது சரி, எது தவறு என தீர்மானிக்கும் ஒரு பிரிவு மாணவர் சங்கங்களின் செயலை அனுமதிக்க முடியாது' என்றார்.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன் பேசும் போது, "தில்லி பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த லேடி ஸ்ரீ ராம் கல்லூரியைச் சேர்ந்த குர்மெஹர் கெüர் தனது முகநூல் பதிவில் "குண்டர்கள் குறித்து கவலையில்லை' எனத் தெரிவித்திருந்தார். இதற்கு குண்டர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் அவரது உயிருக்கும், நடத்தைக்கும் அச்சம் விளைப்பதாக உள்ளன. கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களை மாநிலங்களவை கண்டிக்க வேண்டும்' என்றார்.


    சகிப்புத்தன்மை குறித்து இந்தியாவுக்கு பாடம் நடத்தத் தேவையில்லை

    சகிப்புத்தன்மை, ஜனநாயகம் ஆகியவை குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்தத் தேவையில்லை என்று மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
    "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பேச்சு சுதந்திரம்' என்ற தலைப்பில் தில்லி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அதில் பங்கேற்று சுவாமி கூறியதாவது: இந்தியாவில் பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்திய சமூகம் எப்போதும் சகிப்புத்தன்மையுடன் இருந்து வருகிறது. மக்கள் அனைவரும் விவாதம் செய்வதன் மூலம் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட தேசத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
    எங்களுக்கு யாரும் அதுதொடர்பாக பாடம் நடத்தத் தேவையில்லை என்று சுவாமி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி கடந்த 4-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நிகழ்ச்சி நடத்துவதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி பல்கலைக்கழக முதல்வர் அப்போது இந்நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai