Enable Javscript for better performance
பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை: அருண் ஜேட்லி- Dinamani

சுடச்சுட

    

    பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை: அருண் ஜேட்லி

    By DIN  |   Published on : 11th March 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ArunJetl

    பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
    இதுதொடர்பான கேள்விக்கு மக்களவையில் அவர் வெள்ளிக்கிழமை பதிலளித்துப் பேசியதாவது: இந்தியாவில் பொருளாதார குற்றச் செயல்கள் புரிந்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு சில நாடுகள் முன்வந்தபோதிலும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகள் முடிவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கின்றன.
    எனவே, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களைத் திருப்பி அழைத்து வருவதற்காக, பல்வேறு வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதால், குற்றச் செயல்கள் புரிந்தவர்கள் இனி வெளிநாட்டில் ஒளிந்துகொள்ள முடியாது என்றார் அவர்.
    அப்போது குறுக்கிட்டுப் பேசிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் செüகதா ராய், ""ஐபிஎல் மோசடியில் தொடர்புடையவரையும் (லலித் மோடி), கிங்ஃபிஷர் நிறுவன அதிபரையும் (மல்லையா) இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ""சம்பந்தப்பட்டவர்களின் ரூ.840 கோடி மதிப்பிலான சொத்துகளை பல்வேறு விசாரணை அமைப்புகள் முடக்கியிருக்கின்றன'' என்று பெயரைக் குறிப்பிடாமல் ஜேட்லி பதிலளித்தார்.
    மேலும், ""இந்தியாவில் பொருளாதார குற்றச் செயல்களை புரிந்துவிட்டு, வெளிநாடுகளில் பதுங்கியிருப்பவர்களின் சொத்துகளை முடக்குவது தொடர்பாக, தற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யலாமா? அல்லது புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது'' என்றும் ஜேட்லி கூறினார்.
    ராணுவ வீரர்களுக்கு ஊக்கம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல், இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒழுங்கையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது என்று மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே கூறினார்.
    அவர் மேலும் கூறியதாவது:
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவ வீரர்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் 28, 29-ஆம் தேதிகளில் நடத்திய துல்லியத் தாக்குதலில் பயங்கரவாதிகள் தரப்பில் குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.
    இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ராணுவ வீரர்களின் மனநிலை குறித்து மதிப்பீடு ஏதும் செய்யவில்லை.
    எனினும், இந்தத் தாக்குதல் சம்பவம், ராணுவ வீரர்களுக்கு ஒழுங்கையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai