Enable Javscript for better performance
மீனவர் பிரச்னையில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: கனிமொழி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    மீனவர் பிரச்னையில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: கனிமொழி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 11th March 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kanimozhi

    தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி குற்றம்சாட்டினார்.
    தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை எழுப்புவதற்கு திமுக சார்பில் கனிமொழி மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்திருந்தார். இந்நிலையில், மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலையில் கூடியதும் இந்த விவகாரத்தை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று கனிமொழி, திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் குரல் எழுப்பினர். இதையடுத்து, கனிமொழியை பேச அழைத்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன், "மூன்று நிமிடங்களுக்குள் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்' என்று கூறினார்.
    விவாதிக்க அனுமதி மறுப்பு: இதனால், அதிருப்தியடைந்த கனிமொழி, "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையை அவைக்குள் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அவை விதி 267-இன்படி நோட்டீஸ் கொடுத்தோம். அதை நிராகரித்து விட்டு கருத்தை மட்டுமே பதிவு செய்யுமாறு கூறுகிறீர்கள். இந்த விவகாரத்தில் விவாதிக்கவே உறுப்பினர்களை அனுமதிப்பதில்லை. அதுவும் மூன்று நிமிடங்களுக்குள் பேசுமாறு கட்டுப்பாடு விதிக்கிறீர்கள். விலை மதிப்பற்ற பல மீனவர்கள் உயிருக்கு நம் நாட்டில் இவ்வளவுதானா மரியாதை? இந்த விஷயத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவையில் இருப்பதால் அவர் பதில் தருவார் என எதிர்பார்க்கிறோம். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திரும்பி கரை திரும்புவோமா என்ற அச்சத்துடன் தொழிலுக்குச் செல்கின்றனர்.
    மத்திய அரசுக்கு கேள்வி: கடல் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்தால் இந்திய மீனவர்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கிறார். இதனால், தமிழ்நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. பிரதமராவதற்கு முன்பு தமிழகத்தில் பேசிய நரேந்திர மோடி, "மத்திய ஆளும் அரசு வலுவிழந்து இருப்பதால் மீனவர்கள் பிரச்னையில் அதற்கு அக்கறை இல்லை' என்றார். இப்போது அதே நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் அரசு அமைந்துள்ளது. இவரது அரசு வலுவாகவே இருக்கிறது. ஆனால், ஏன் அக்கறையின்றி செயல்படுகிறது. அப்பாவி தமிழக மீனவர்களுக்கு எவ்வாறு இந்த அரசு அநீதி இழைக்கலாம்? இவர்கள் எல்லாம் இந்திய குடிமக்கள் இல்லையா? என்றார் கனிமொழி.
    இதைத் தொடர்ந்து மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பேசுகையில், "எல்லை தாண்டி கடலில் மீனவர்கள் வந்தால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தாமல் கைது செய்ய மட்டுமே இலங்கை கடற்படைக்கு உரிமை உள்ளது. இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே பல பிரச்னைகள் இருக்கலாம். இந்த விஷயத்தில் கடுமையான செய்தியை இலங்கைக்கு இந்தியா தெரிவிக்க வேண்டும்' என்றார்.
    அமைச்சர் பதில்: இதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதில் அளிக்கையில், "நடுக்கடலில் மீனவர் உயிரிழந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில் மத்திய அரசுக்கு நெஞ்சார்ந்த கவலை உள்ளது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, இலங்கை அதிபரைச் சந்தித்த போது, இந்த விஷயம் தொடர்பான தனது ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொண்டார். மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதாக இந்தியாவுக்கு இலங்கை உறுதியளித்துள்ளது' என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai