Enable Javscript for better performance
வழக்குகளுக்கு தீர்வு காண கால வரம்பு நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    வழக்குகளுக்கு தீர்வு காண கால வரம்பு நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 11th March 2017 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அதன்படி, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை 1 வாரத்துக்குள் முடித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் சிறிய அளவிலான குற்ற வழக்குகள் மீதான விசாரணையை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
    சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் இருவர், தங்கள் மீதான குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
    அந்த மனு, நீதிபதிகள் ஆதர்ஸ் குமார் கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
    தாமதமாக வழங்கப்படும் தீர்ப்பு, நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை தளர்ந்து போகச் செய்துவிடும். வழக்கு விசாரணையை நடத்த மனுதாரர்களிடம் போதிய நிதி வசதி இல்லாவிட்டாலும்கூட, விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. எனவே, அந்த உரிமையை மறுதலிக்க முடியாது.
    ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான விசாரணையை காலந்தாழ்த்தக் கூடாது. அவற்றை ஒரு வாரத்துக்குள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோன்று சிறிய அளவிலான குற்ற வழக்குகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும். கடும் குற்றமாக இருந்தால், அதன் மீதான வழக்கு விசாரணையை 2 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்வது அவசியம்.
    இதுதொடர்பான அறிவுறுத்தல்களை கீழமை நீதிமன்றங்களுக்கு, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை நிகழாண்டு இறுதிக்குள் விசாரித்து முடிக்கும் நோக்கில் நீதிமன்றங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai