சுடச்சுட

    
    election

     

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (மார்ச் 11) எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டிருப்பதால் சனிக்கிழமை பிற்பகலுக்குள் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போகும் கட்சிகள் எவை என்பது தெரிந்துவிடும்.

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ள 403 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் கடந்த 8-ஆம் தேதி வரையிலும் 7 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. உத்தரகண்டில் (70 தொகுதிகள்) கடந்த மாதம் 15-ஆம் தேதியும், பஞ்சாப் (117) மற்றும் கோவா (40) ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் 4-ஆம் தேதியும், மணிப்பூரில் (60) கடந்த 4 மற்றும் 8-ஆம் தேதியன்றும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தில் 78 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டில் 15 மையங்களிலும், பஞ்சாபில் 54 மையங்களிலும், கோவாவில் 2 மையங்களிலும், மணிப்பூரில் 12 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    3 அடுக்கு பாதுகாப்பு

    வாக்கு எண்ணும் மையங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் கடுமையான விதிகளை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்லிடப் பேசிகளை எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பொது பார்வையாளர்களைத் தவிர்த்து, வாக்கு எண்ணப்படும் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 5 மாநிலங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 20 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையத்தினுள் மத்திய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே அந்தந்த மாநில போலீஸாரும், பிற மாநிலங்களில் இருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்திருக்கும் போலீஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவு பகுதியில் பொது மக்களின் நடமாட்டத்துக்கும், வாகன நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் வரையிலான பகுதி வரையிலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    வாக்குக் கணிப்புகள்

    உத்தரப் பிரதேசம், கோவா மாநிலங்களில் தேர்தலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட வாக்குக் கணிப்புகள் அந்த மாநிலங்களில் தொங்கு பேரவையே அமையும் எனத் தெரிவிக்கின்றன. எனினும், இந்த 2 மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று அந்தக் கணிப்புகள் கூறுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்றும், ஆளும் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி பின்னடைவைச் சந்திக்கும் என்றும் வாக்கு கணிப்புகள் தெரிவிக்கின்றன. உத்தரகண்ட், மணிப்பூரில் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக ஆட்சிமன்றக் குழு இன்று கூடுகிறது?

    தில்லியில் பாஜக ஆட்சியமன்றக் குழு சனிக்கிழமை பிற்பகலில் கூட்டப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    இந்த கூட்டத்தில், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்து எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில், பாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாஜக, காங்கிரஸ் பரஸ்பரம் நம்பிக்கை

    உத்தரப் பிரதேசத்தில் தங்களது கட்சிகளுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக பாஜகவும், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியும் பரஸ்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளன. தில்லியில் பாஜக மூத்த தலைவர் ஓம் மாத்தூர் கூறுகையில், "வாக்குக் கணிப்புகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் 3-இல் 2 பங்கு இடங்களில் பாஜக வெற்றி பெறும்' என்றார்.

    மற்றோர் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் கூறுகையில், "பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக கூறியதன்மூலம், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியின் தோல்வியை அகிலேஷ் ஒப்புக் கொண்டு விட்டார்' என்றார்.

    சமாஜவாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியபோது, அகிலேஷ் யாதவ் தொடர்ந்து 2-ஆவது முறையாக முதல்வராக பதவியேற்பார் என்றார். மேலும் அவர் கூறுகையில், "மார்ச் 9-இல் பணம் பேசியது (வாக்குக் கணிப்புகள் பணம் கொடுத்து வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்) மார்ச் 11-இல் மக்கள் பேசுவர்' என்றார்.

    உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார் கூறும்போது, மாநிலத்தில் தங்களது கூட்டணியே ஆட்சியமைக்கும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai