சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர பிரசாரம் உள்ளிட்டவற்றால் பாஜகவுக்கு கிடைத்துள்ள அமோக வெற்றி, அகிலேஷ் யாதவின் சைக்கிளை (சமாஜவாதி கட்சியை) பஞ்சராக்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.
    பொறியியல் பட்டதாரியான அகிலேஷ் யாதவ், கடந்த 2000-ஆம் ஆண்டில் கன்னோஜ் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், அதன்பிறகு தொடர்ச்சியாக 2 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
    இதனிடையே, 2012-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதும், கட்சியின் சட்டப் பேரவை எம்எல்ஏக்கள் தலைவராக அகிலேஷ் யாதவ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தனது 38-ஆவது வயதில் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற அவர், அந்த மாநிலத்தின் முதல் இளம் முதல்வர் எனும் பெருமையைப் பெற்றார்.
    2012-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது மாநிலம் முழுமைக்கும் சமாஜவாதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிளில் அகிலேஷ் சூறாவளி பிரசாரம் செய்தார். அவரது இந்த பிரசாரம், அனைத்து சமூகத்தினரிடையேயும் சமாஜவாதிக்கு வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் மத்தியில் அகிலேஷுக்கும், சமாஜவாதிக்கும் செல்வாக்கை ஏற்படுத்தி தந்தது.
    எனினும், இந்த தேர்தலுக்கு முன்பு, அகிலேஷின் குடும்பத்துக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், பல வாரமாக பத்திரிகைகளில் செய்திகளாக வந்தன. குறிப்பாக, கட்சித் தலைவர் பதவியை பிடிப்பதில் அகிலேஷுக்கும், அவரது தந்தையும் சமாஜவாதியின் நிறுவனருமான முலாயம் சிங்குக்கும் இடையே நிலவிய போட்டி குறித்த செய்திகள் பல பத்திரிகைகளில் நாள்தோறும் முதல் பக்கத்தில் இடம் பிடித்தன.
    இருப்பினும், இதை பொருட்படுத்தாமல், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த அகிலேஷ், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரசாரம் செய்தார். மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாததால் வெற்றி உறுதி என்று அவர் நம்பினார். ஆனால், உத்தரப் பிரதேச தேர்தல் முடிவோ, அகிலேஷ் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரின் தீவிர உழைப்பும் சமாஜவாதியின் சைக்கிள் பஞ்சராகுவதற்கு முக்கிய காரணமாகி விட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai