சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச முதல்வர் யார்?: பாஜக ஆட்சி மன்றக் குழு இன்று ஆலோசனை

    By DIN  |   Published on : 12th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல்வர்களாக பொறுப்பேற்கப் போவது யார்-யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக பாஜக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
    உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே களம் கண்ட பாஜக, இரு மாநிலங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. இதையடுத்து, இரு மாநிலங்களிலும் பொறுப்பேற்கவிருக்கும் முதல்வர்கள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    இதுதொடர்பாக, பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறுகையில், ’இரு மாநிலங்களிலும் மிகத் தகுதிவாய்ந்த நபர்களே முதல்வர்களாக பொறுப்பேற்பர். இது தொடர்பாக பாஜகவில் ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது' என்றார்.
    இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாகவும், அவரது விருப்பத்தின்படியே முதல்வர்கள் தேர்வு அமையும் என்றும் பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
    அவர் மேலும் கூறியதாவது: மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை மையப் புள்ளியாக கொண்டு, வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வியூகங்கள் வகுக்கப்படவிருக்கின்றன. அந்த மாநிலத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிர்வாகத் திறன் கொண்ட ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இதுபோன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, முதல்வரை பிரதமர் மோடி தேர்வு செய்வார். ஹோலி பண்டிக்கைக்கு பிறகு இரு மாநில முதல்வர்கள் யாரென்பது தெரிய வரும் என்றார் அவர்.
    முன்னதாக, உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் முதல்வராக்கப்படுவார் என்று தேர்தலுக்கு முன்பே யூகங்கள் வெளியாகின. ஆனால், அதற்கு சாத்தியமில்லை என்று ராஜ்நாத் சிங் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்தார்.
    இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, மனோஜ் சின்ஹா, பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் ஆகியோரது பெயர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.
    உத்தரகண்ட் மாநிலத்தை பொருத்தவரை, அந்த மாநில பாஜக தலைவர் அஜய் பட் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார். இதனால், கட்சியின் மூத்த தலைவர்கள் திரிவேந்திர சிங் ராவத், சத்பால் மகாராஜ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai