சுடச்சுட

    

    உ.பி.யில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியே காரணம்: சிவசேனை

    By DIN  |   Published on : 12th March 2017 11:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதற்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியே காரணமென்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக அக்கட்சியின் நாளேடான "சாம்னா'வில் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, பாஜக வெற்றி பெற்றால், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி மீதான தீர்ப்புதான், உத்தரப் பிரதேச தேர்தல் முடிவு. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்தல் மீதான தீர்ப்பு அல்ல.
    உத்தரப் பிரதேசத்தில் பாஜக மேற்கொண்ட பிரசாரம், அதன் அண்டை மாநிலமான உத்தரகண்டிலும் அக்கட்சிக்கு சாதகமாக இருந்தது. எனினும், பஞ்சாபில் பாஜக-சிரோமணி அகாலிதளம் கூட்டணி மண்ணைக் கவ்விவிட்டது. கோவாவில் மனோகர் பாரிக்கர் (பாதுகாப்பு அமைச்சர்) போன்ற தலைவர்கள் இருந்தும் 15 இடங்களில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. மணிப்பூரிலும் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முடிவு அமையவில்லை.
    ஆதலால், உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து பேசும்போது, மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும் பேச வேண்டும்.
    உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது மயானம், உடல் தகனம் செய்யும் இடம் குறித்து பேசி வாக்குகளை பிரிப்பதில் பிரதமர் மோடி வெற்றியடைந்தார். இதற்குப் பதில், பொது சிவில் சட்டம், ராமர் கோயில் விவகாரம் குறித்து அவர் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    உத்தரப் பிரதேசத்தில் விரைவில் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது. மத்தியிலும் அக்கட்சி ஏற்கெனவே ஆட்சியில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை எப்போது பாஜக தொடங்கும் எனத் தெரியவில்லை?
    பிகாரில் முதல்வர் நீதிஷ் குமாரின் தலைமையையும், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
    ஆனால், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான தலைமையை மக்கள் நிராகரித்து விட்டனர். அகிலேஷ் யாதவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுக்கு தலித்துகளும், யாதவ் சமூகத்தினரும் வாக்களித்துள்ளனர் என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai