சுடச்சுட

    

    உ.பி.யில் பாஜக-வின் வெற்றி, ஆபத்துக்கான அறிகுறி: இடதுசாரிகள் கருத்து

    By DIN  |   Published on : 12th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கான அறிகுறி என்று இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய அபாயத்துக்கான அறிகுறியாகும்.
    நாட்டில் மதத் துவேஷத்தை தூண்டும், அழிவை ஏற்படுத்தும் ஹிந்துத்துவ அரசியலை இந்த வெற்றி மேன்மேலும் ஊக்கப்படுத்தும். மத உணர்வைப் பயன்படுத்தியே பாஜக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
    எனவே, மதவாத சக்திகளால் தேச அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இடதுசாரிக் கட்சிகளும், பிற மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கூறுகையில், ’’இந்தத் தேர்தல் முடிவுகள் இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோர், மதவெறித் தாக்குதல் நிகழ்த்துவோரை வீழ்த்துவதற்காக அந்த சக்திகள் ஒன்றுபட வேண்டும்.
    உத்தரப் பிரதேச மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, அதனால் பாஜக வெற்றி பெற்றுள்ளதன் மூலம், தேர்தல் முறையின் மாண்பை பாஜக குலைத்துள்ளது என்றார் அவர்.
    உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆதரவாக நடந்துகொள்வதாகவும், ஹிந்துக்களைப் புறக்கணிப்பதாகவும் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai