சுடச்சுட

    

    உ.பி., உத்தரகண்டில் பாஜக அமோக வெற்றி: பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்

    By DIN  |   Published on : 12th March 2017 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    result

    கோவா, மணிப்பூரில் இழுபறி


    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
    அதேநேரத்தில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக இடையே ஆட்சியமைப்பது தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
    உத்தரப் பிரதேசம் (403), உத்தரகண்ட் (70), பஞ்சாப் (117), கோவா (40), மணிப்பூர் (60) ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு பல கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் தொங்கு பேரவை அமையலாம் என்று வாக்குக் கணிப்புகள் வெளியான நிலையில், அதை பொய்ப்பிக்கும் வகையில் பாஜக மிகப்பெரிய அளவில் சாதனை வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளிலும் பாஜக வாகை சூடியுள்ளது.
    அதேநேரத்தில், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் ஆகியவை தொடர்ந்து பின்தங்கி வந்தன. முடிவில் 403 தொகுதிகளில் 325-ல் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன. இதில் பாஜக மட்டும் 4-இல் 3 பங்கு பெரும்பான்மை பலத்தை பெற்றது. அதாவது, 312 தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது. சமாஜவாதி கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சியால் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
    கடைசியாக கடந்த 1991-ஆம் ஆண்டில் ராமர் கோயில் விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடைபெற்றபோது, பிளவுபடாத ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேசத்தில் 221 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. அதற்கடுத்து மிகப்பெரிய அளவில் பாஜக தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது.
    உத்தரகண்ட்: உத்தரகண்டில் 70 தொகுதிகளில் பாஜக 57 இடங்களில் வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியடைந்தது. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான ஹரீஷ் ராவத் தாம் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். உத்தரகண்ட் உருவாக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த மாநிலத்தில் எந்தவொரு கட்சியும் இதுவரையிலும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்ததில்லை. தற்போதுதான் முதல்முறையாக பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
    பஞ்சாப்: பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சிரோமணி அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைத்தன. இதில் சிரோமணி அகாலி தளம் 15 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
    காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளரான அமரீந்தர் சிங் பாட்டியாலா தொகுதியில் 52,407 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், சிரோமணி அகாலிதளம் தலைவரும், முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலிடம் லாம்பி தொகுதியில் 22,770 வாக்குகள் வித்தியாசத்தில் அமரீந்தர் சிங் தோல்வியடைந்தார்.
    முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் வேட்பாளருமான நவ்ஜோத் சித்து (60,477), கிழக்கு அமிருதசரஸ் தொகுதியில் வெற்றி பெற்றார். பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளரான அமரீந்தர் சிங், விரைவில் முதல்வராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.
    கோவா: கோவாவில் ஆளும் பாஜக 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி), கோவா ஃபார்வர்டு கட்சி, சுயேச்சைகள் ஆகியன தலா 3 இடங்களில் (மொத்தம் 9) வெற்றி பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    கோவாவில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 21 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால் எம்ஜிபி, கோவா பார்வர்டு கட்சி ஆகியன எடுக்கும் முடிவுகளை அடிப்படையாக வைத்தே, கோவாவில் அடுத்து எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது தெரியவரும். கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கோவா தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
    மணிப்பூர்: மணிப்பூர் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக 21 தொகுதிகளில் வென்று 2-ஆவது பெரிய கட்சியாக திகழ்கிறது.
    நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 4 இடங்களில் வென்றுள்ளது. பிற கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான 31 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. மணிப்பூர் முதல்வர் இபோபி சிங், தௌபால் தொகுதியில் 10,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    மணிப்பூர் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா 90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். இதையடுத்து, அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai