சுடச்சுட

    

    உ.பி. பேரவைத் தேர்தல் தோல்வி வேதனை அளிக்கிறது: காங்கிரஸ்

    By DIN  |   Published on : 12th March 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி மனவேதனை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. அதேசமயத்தில் பஞ்சாப், கோவா பேரவைத் தேர்தல் வெற்றி ஆறுதல் அளிப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ’உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது பெரிய இழப்பாகும். இது மனவேதனை அளிக்கிறது. அந்த மாநிலத்தில் நாங்கள் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. உத்தி சார்ந்த விஷயங்களில் கடுமையான முடிவுகளை எடுக்கவும் வேண்டியுள்ளது' என்றார்.
    பாஜகவுக்கு வாழ்த்து: இந்நிலையில், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெற்றுள்ள வெற்றிக்காக பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம். இந்த இரு மாநிலங்களிலும் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். காங்கிரஸ் கட்சி எப்போதுமே வெற்றியில் துள்ளிக் குதிப்பதுமில்லை; தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை.
    உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்து கொள்வதோடு, கட்சியை வலுப்படுத்திக் கொள்ளவும், இரு மாநில மக்களின் பாதுகாவலனாக இருக்கவும் உறுதிபூண்டு செயல்படும்.
    ’காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என்று ஓயாமல் பேசி வந்தவர்களுக்கு (மோடி மற்றும் பாஜகவினர்) இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் நல்ல பாடமாகும். பாஜக இனியாவது இடுகாடு-சுடுகாடு போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் உத்தரப் பிரதேசத்தின் கலாசாரமான சகோதரத்துவம் மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசியலில் ஈடுபடும் என்று நம்புகிறோம். மேலும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, பயிர்களுக்கு உரிய அதிகபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பது, தொழில்மயமாக்கல் என்ற புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகிறோம்.
    உத்தரப் பிரதேசத்திலும், உத்தரண்டிலும் தனக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை காங்கிரஸ் உணர்ந்தே உள்ளது. இந்த மாநிலங்களில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் நிச்சயம் பெறும் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai