Enable Javscript for better performance
சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி- Dinamani

சுடச்சுட

    

    சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

    By DIN  |   Published on : 12th March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sathiskar

    சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 12 மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.
    காயமடைந்தவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
    இதுகுறித்து சிஆர்பிஎஃபின் தாற்காலிக தலைமை இயக்குநர் சுதீப் லக்டாகியா கூறியதாவது:
    நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் பேஜ்ஜி காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட கொட்டாசேரு கிராமத்தில். சிஆர்பிஎப் 219-ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 112 வீரர்கள் சாலை அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தனர்.
    பேஜ்ஜி முதல் கொட்டாசேரு வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அதற்கான பாதுகாப்பு அளிப்பதற்காக அவர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, காலை 9.15 மணிக்கு நக்ஸல் தீவிரவாதிகள் சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதனைத் தொடர்ந்து, சிஆர்பிஎஃப் வீரர்களை நோக்கி அவர்கள் சரமாரியாகச் சுட்டனர்.
    நக்ஸல்களின் இந்தத் தாக்குதலுக்கு, சிஆர்பிஎஃப் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்தச் சண்டையில் 12 வீரர்கள் உயிரிழந்தனர்.
    உயிரிழந்த வீரர்களிடமிருந்து இன்சாஸ் மற்றும் ஏ.கே. ரக இயந்திரத் துப்பாக்கிகள், ரேடியோ கருவிகளை நக்ஸலைட்டுகள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    இந்தப் பகுதியில் சிஆர்பிஎஃப் படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், நக்ஸல்களின் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட உள்ளூர் சந்தை சிஆர்பிஎஃப் படையின் உதவியுடன் மீண்டும் திறக்கப்பட்டதையும் விரும்பாத தீவிரவாதிகள், இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் சுதீப் லக்டாகியா. நக்ஸல் தாக்குதலில் வீரர்கள் உயிரிழந்த தகவல் அறிந்ததும், சிஆர்பிஎஃப் உயரதிகாரிகள் சுக்மா மாவட்டம் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    தாக்குதல் குறித்து சிஆர்பிஎஃப் வட்டாரங்கள் கூறியதாவது:
    வனப் பகுதியில் தாக்குதல் நிகழ்த்துவதற்கு கோடைக் காலம் மிகவும் வசதியானது என்பதால், ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் நக்ஸல்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்துவது வழக்கம்.
    இந்தப் பகுதியில், ஏற்கெனவே நக்ஸல்கள் நிகழ்த்திய பல்வேறு தாக்குதல்களில், ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர்.
    சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்தப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முக்கிய நக்ஸல் தீவிரவாதியான ஹித்மா சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
    எனினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே இதுகுறித்த முழு விவரமும் தெரியவரும்.
    தற்போதைக்கு, 100-க்கும் மேற்பட்ட நக்ஸல் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது என்று சிஆர்பிஎஃப் வட்டாரங்கள் தெரிவித்தன.
    தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும், நக்ஸல் எதிர்ப்பு சிறப்பு அதிரடிப் படையான ’கோப்ரா' அந்தப் பகுதியை உடனடியாக சுற்றிவளைத்து, தீவிரவாதிகளைத் தேடி வருகின்றனர்.
    பிரதமர் ஆலோசனை: இதற்கிடையே, நக்ஸல்களின் இந்த பயங்கர தாக்குதல் குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
    தாக்குதலில் உயிர் நீத்தவர்கள் நக்ஸல்கள் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விவரம் பின்வருமாறு:
    ஆய்வாளர் ஜகதித் சிங், துணை ஆய்வாளர்கள் ஹெச்.பி. பட் மற்றும் நரேந்திர குமார் சிங், தலைமைக் காவலர்கள் ஜகதீஷ் பிரசாத் விஷ்ணோய் மற்றும் பி.ஆர். மிண்டே, காவலர்கள் மகேஷ் பால் பாண்டே, ராம்பால் சிங் யாதவ், கோரக்நாத், நந்தகுமார் பாத்ரா, சதீஷ் குமார் வர்மா, கே. சங்கர், சுரேஷ் குமார் ஆகியோர் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்தார்கள்.
    இதுதவிர, தாக்குதலில் படுகாயமடைந்த காவலர்கள் ஜெய்தேவ் பர்மாணிக் மற்றும் சலீமின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    தலைவர்கள் கண்டனம்
    பிரதமர் நரேந்திர மோடி: சுக்மா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
    சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நக்ஸல் தாக்குதலுக்குப் பலியான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என்று மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    முதல்வர் ரமண் சிங்: தாக்குதல் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கூறுகையில், நக்ஸலைட்டுகள் நடத்தியுள்ள இந்த கோழைத்தனமான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி:
    இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ’பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மத்திய அரசு மிகச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai