சுடச்சுட

    
    modi_pray

    சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் பெருமிதத்தையும், பெருமகிழ்ச்சியையும் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
    இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
    இதுவரை இல்லாத அளவில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பாஜக பெற்றிருப்பது பெருமிதம் கொள்ளச் செய்கிறது. இளைஞர்கள் மத்தியில் பாஜகவுக்கு பேராதரவு கிடைத்திருப்பதும் மகிழ்வைத் தருகிறது.
    பாஜக மீது பற்றும், நம்பிக்கையும் கொண்டு தொடர்ந்து ஆதரவு தரும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    எங்கள் நேரத்தின் ஒவ்வொரு கணமும், நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியும் நாட்டு மக்களின் நலனுக்கானவையே.
    இந்த வேளையில், பாஜகவின் வெற்றிக்காக, அடிமட்ட அளவில் அயராது பாடுபட்டு, மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த கட்சித் தொண்டர்களை வணங்குகிறேன்.
    மேலும், அரசியல் அரங்கில் பாஜகவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்குப் பாடுபட்ட கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, கட்சி நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியையும், நல்ல நிர்வாகத்தையும் எதிர்பார்த்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பாஜகவுக்கு கொடுத்த உத்தரப் பிரதேச மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    காசி (வாராணசி மக்களவைத் தொகுதி) எம்.பி.யான என்னிடம், இப்பகுதி மக்கள் அளவு கடந்த அன்பையும், உறுதியான நம்பிக்கையும் வைத்து, என்னைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் தலை வணங்குகிறேன். உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு சிறப்பான வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த மாநில மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பாஜக பணியாற்றும் என்று உறுதியளிக்கிறேன்.
    மேலும், அகாலி தளம்-பாஜக கூட்டணி, 10 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு வாய்ப்பளித்த பஞ்சாப் மாநில மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    பிரதமர் மோடிக்கு ராகுல் வாழ்த்து
    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
    இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’’உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிடடுள்ளார்.
    அவருடைய வாழ்த்துச் செய்திக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். ’’நன்றி. ஜனநாயகம் நீடுழி வாழட்டும்'' என்று மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்த அந்த மாநில மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
    பஞ்சாப் மாநிலத்தின் ஒளிமயமான எதிர்காலத்தையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு காங்கிரஸ் கட்சியை மக்கள் ஆதரித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    மேலும், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபட்ட கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும், கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது நம்பிக்கையுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் மனங்களை வெல்லும் வரை, நமது (காங்கிரஸ்) போராட்டம் ஓயாது; தொடரும் என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai