பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகர சோதனை
By DIN | Published on : 12th March 2017 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஒலியைவிட வேகமாக பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை, ஒடிஸாவின் பாலாசோர் சோதனைத் தளத்தில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்தியாவும், ரஷியாவும் கூட்டாக உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியின் வேகத்தைப் போல் 2.8 மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து சென்று, இலக்குகளை அழிக்கவல்லது. தாழ்வாகப் பறந்து செல்லும் ’குரூஸ்' வகையைச் சேர்ந்த உலகின் மிக வேகமான ஏவுகணையான இது, 300 கிலோ எடை கொண்ட வெடிபொருளை சுமந்து சென்று குறுகிய தொலைவு இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடியது.
இந்தச் சூழலில், தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ரகத்தை, ஒரிஸாவின் பாலாசோர் அருகே கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சாந்திபூர் சோதனைத் தளத்தில் இந்தியக் கடற்படை சனிக்கிழமை சோதித்தது.
வாகன ஏவு சாதனத்தின் மூலம் காலை 11.33 மணிக்கு செலுத்தப்பட்ட அந்த ஏவுகணை, மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் ரகத்தை இந்திய கடற்படை முதல்முதலாக தனது ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பலில் கடந்த 2005-ஆம் ஆண்டு பொருத்தியது.
ஐஎஸ்எஸ் கொல்கத்தா, ஐஎஸ்எஸ் கொச்சி ஆகிய போர்க் கப்பல்களிலிருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
ராணுவமும் தனது 3 படைப்பிரிவுகள் பயன்படுத்துவதற்காக பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கி வருகிறது. இதுதவிர, விமானப் படை பயன்படுத்துவதற்காக, விண்ணிலிருந்து ஏவக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை ரகத்தையும் டிஆர்டிஓ உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.