சுடச்சுட

  

  மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் மணிப்பூரில் ஆட்சி: காங்கிரஸ்

  By DIN  |   Published on : 12th March 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் அந்த மாநிலத்தில் ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கு இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவியது. இந்நிலையில், பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டபோது. எந்தக் கட்சிக்கும் சாதமாக தேர்தல் முடிவுகள் அமையவில்லை.
  31 தொகுதிகளைக் கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றிருந்தன.
  நாகாலாந்து மக்கள் முன்னணியைப் பொருத்தவரை 4 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றின. திரிணமூல் காங்கிரஸ், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகளும், சுயேச்சையும் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றன.
  மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தெளபால் தொகுதியில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். மொத்தத்தில், எந்தக் கட்சியும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தொங்கு சட்டப் பேரவை அமைந்துள்ளது.
  இந்நிலையில், நாகாலாந்து மக்கள் முன்னணி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவுடன் மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.என்.கெளகிப் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  மதச்சார்பற்ற ஆட்சி மாநிலத்தில் அமைய வேண்டும் என்றே விரும்புகிறோம். காங்கிரஸுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சியமைக்க உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களுடன் நடத்தப்பட்டுள்ளது.
  அதேவேளையில், தேசிய மக்கள் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கோராது என்றார் அவர்.
  இதனிடையே, மணிப்பூர் தேர்தலில் ஓரிடத்தில் வெற்றி பெற்ற ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி, பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai