சுடச்சுட

    

    முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த அகிலேஷ், ராவத், பார்சேகர்: இன்று ராஜிநாமா செய்கிறார் பாதல்

    By DIN  |   Published on : 12th March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    akiles

    தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், கோவா முதல்வர் லஷ்மிகாந்த் பார்சேகர் ஆகியோர், தங்களது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தனர்.
    பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) ராஜிநாமா செய்யவிருக்கிறார்.
    உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜவாதி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் அகிலேஷ், தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும், தோல்விக்கான காரணங்களை ஆராயவிருப்பதாகவும் தெரிவித்தார்.
    பின்னர், லக்னௌவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் ராம் நாயக்கைச் சந்தித்த அகிலேஷ் யாதவ், தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பதவியில் தொடருமாறு அகிலேஷிடம் கேட்டுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
    உத்தரகண்ட்: இதேபோல, உத்தரகண்டில் ஆளும் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஹரீஷ் ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
    தான் போட்டியிட்ட கிச்சா, ஹரித்துவார் (ஊரகம்) ஆகிய இரு பேரவைத் தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்களிடம் தோல்வி கண்ட ஹரீஷ் ராவத், ஆளுநர் கே.கே.பாலிடம் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன். இந்த தேர்தலில், பண பலத்தின் மூலமே பாஜக வெற்றி பெற்றுள்ளது' என்றார்.
    கோவா: கோவா பேரவைத் தேர்தலில் தோல்விகண்ட பாஜக முதல்வர் லஷ்மிகாந்த் பார்சேகர், ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
    மண்ட்ரேம் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பார்சேகர், காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த 2014-ஆண்டில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, பார்சேகர் முதல்வர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பஞ்சாப்: பஞ்சாபில் ஆளும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணியைத் தோற்கடித்து, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. புதிய முதல்வராக அமரீந்தர் சிங் பொறுப்பேற்கவுள்ளார்.
    இந்நிலையில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். நான் ஆளுநரை ஞாயிற்றுகிழமை சந்தித்து, எனது ராஜிநாமா கடிதத்தை அளிக்கவிருக்கிறேன். பஞ்சாபின் உரிமைகள் தொடர்பான விவகாரங்களில், அமரீந்தர் சிங்குக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். தேர்தலில் எங்கள் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதற்காக ஒரு குழுவை அமைக்கும்படி, கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலிடம் அறிவுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.
    89 வயதாகும் பிரகாஷ் சிங் பாதல், பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்தவர். மேலும், இந்தத் தேர்தலில் போட்டியிட்ட வயதான வேட்பாளரும் அவர்தான்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai