மோசடி செய்ய வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம் பதில்
By DIN | Published on : 12th March 2017 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உத்தரப் பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறிய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தாம் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளையும் அது பட்டியலிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம், மாயாவதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தப்படுவதை நீதித்துறையும் ஆதரித்துள்ளது. இது தொடர்பான நிர்வாக நடைமுறைகள் உத்தரப் பிரதேசத்திலும் உத்தரகண்டிலும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளன.
எனவே, தங்களது குற்றச்சாட்டுகளை ஏற்புடையதாக தேர்தல் ஆணையம் கருதவில்லை. மேலும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற தங்களது கோரிக்கையும் சட்டரீதியில் ஏற்கத்தக்கதாக இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைச் செய்ய முடியும் என்று குற்றம்சாட்டியவர்களுக்கு அதை நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் பல முறை வாய்ப்பளித்துள்ளது. எனினும், இதுவரை யாரும் அவ்வாறு முறைகேடு செய்ய முடியும் என்று நிரூபிக்கவில்லை என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.