சுடச்சுட

    

    விசாகப்பட்டினம்-கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை வழியாக புதிய ரயில்பாதை: ரயில்வே அமைச்சர்

    By DIN  |   Published on : 12th March 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    railway

    பொன்மலையை இணைக்கும் புதிய பை-பாஸ் இருப்புப் பாதை மற்றும் விழுப்புரம் சந்திப்பில் மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து தமிழகத்தின் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை வழியாக புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு தெரிவித்துள்ளார்.
    திருச்சி பொன்மலையில் 2.13 கி.மீ. தொலைவுக்கு மெயின்லைன் மற்றும் கார்டு லைன் ரயில் பாதைகளை இணைக்கும் நிகழ்ச்சி திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, திருச்சி-நெல்லை இண்டர்சிட்டி விரைவு ரயிலை திருவனந்தபுரம் வரையில் நீடித்தும் ரு. 105 கோடி செலவில் விழுப்புரம் மற்றும் திருவெண்ணைநல்லூர் இடையே 16 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்ட மின்வசதியுடன் கூடிய 2-வது ரயில் பாதையை பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்டவற்றை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தும், மேலும் அவர் பேசியது:
    தமிழகத்தில் ரயில்வே துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. முந்தைய காலங்களில் வழங்கப்பட்ட ரூ.878 கோடியை விட, தற்போது சுமார் ரூ.2,300 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    கடந்த வாரம், சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை - பெங்களூர் இடையிலும் புதிய ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்.
    அதேபோல, சென்னையிலிருந்து நாகை வழியாக தூத்துக்குடிவரை கிழக்குக் கடற்கடரைச் சாலையில் புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு கடற்கரையோரமாக கன்னியாகுமரி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
    இதன் மூலம் கிழக்கு மற்றும் தெற்கு ரயில்வே இணைக்கப்படுவதுடன் முக்கிய நகரங்கள் அனைத்தும் இந்தப் பாதையில் அமையும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் அனைத்து வகையிலும் மேம்பாடு அடையும்.
    ரயில்வே துறையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி தேவைப்படுகின்றது. இவற்றின் மூலம், தற்போது நடைபெற்று வரும் ரயில்வே இரட்டைப் பாதைகள், மின்மயம், பாதுகாப்பு, பயணிகள் நலன், உள்கட்டமைப்பு, புதிய ரயில் பாதைகள், ரயில்கள் என பல்வேறு திட்டங்கள் தற்போது நடந்து வருவதைப் போலவே இரு மடங்கு பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் சாத்தியமுள்ளது.
    மத்திய அரசு திட்டங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தும் போது மாநில அரசின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். தமிழகத்தைப் பொறுத்தவரையில், மாநில அரசு தற்போது உள்ளதைப்போல ஒருங்கிணைந்து செயல்பட்டால் மேலும் பல திட்டங்களை தமிழகம் பெறும் நிலை விரைவில் ஏற்படும். விரைவில் மத்திய அரசு அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் செயலர்களை அணுகி திட்டங்கள் குறித்து விளக்கி நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
    திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு
    திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரை பகல்நேரத்தில் இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி விரைவு ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
    நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், வளர்மதி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ரயில்வே பயணிகள் நலக் குழு உறுப்பினர் எச்.ராஜா, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே. அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai