சுடச்சுட

    

    90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி: அரசியலில் இருந்து விலகுவதாக இரோம் ஷர்மிளா அறிவிப்பு

    By DIN  |   Published on : 12th March 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    irom

    மணிப்பூர் பேரவைத் தேர்தலில் வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்த சமூக சேவகி இரோம் ஷர்மிளா, அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
    தற்போதைய அரசியல் நடைமுறைகளைக் கண்டு தாம் விரக்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் இரோம் ஷர்மிளா.
    இதையடுத்து, அவர் மீது தற்கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அண்மையில் அறிவித்த இரோம் ஷர்மிளா தீவிர அரசியலில் இறங்கினார். மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய அவர், மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தெளபால் தொகுதியில் போட்டியிட்டார்.
    மாநிலப் பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தத் தொகுதியில், வெறும் 90 வாக்குகளை மட்டுமே பெற்று இரோம் ஷர்மிளா படுதோல்வியடைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, இம்பாலில் செய்தியாளர்களிடம் இரோம் ஷர்மிளா சனிக்கிழமை கூறியதாவது:
    தற்போது உள்ள அரசியல் நடைமுறைகள் மனவிரக்தியைத் தருகின்றன. இதன் காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அரசியல் ரீதியாக தோல்வியடைந்தாலும், சமூக சேவகராக எனது பணிகள் தொடரும்.
    ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யும் வரை எனது போராட்டம் முடிவடையாது. தற்போது எனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவில் இருந்து மீண்டு வரவும், மன நிம்மதிக்காகவும், சில நாள்களுக்கு தென்னிந்தியாவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai