சுடச்சுட

    

    உ.பி., உத்தரகண்டில் வெற்றி: புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் பணி பாஜகவுக்கு எளிதானது

    By DIN  |   Published on : 13th March 2017 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parliment

    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்துள்ள அமோக வெற்றி, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலின்போது வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை அக்கட்சிக்கு எளிமையாக்கியுள்ளது.
    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் பதவியை தொடர்ந்து 2-ஆவது முறையாக வகிக்கும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலமும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
    இதையடுத்து அந்த 2 பதவிகளுக்கும் புதியவர்களை மத்திய அரசு தேர்வு செய்ய வேண்டியுள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கு முன்பு வரையிலும், மேற்கண்ட 2 பதவிகளுக்கும் பாஜகவால் தன்னிச்சையாக வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாத நிலை காணப்பட்டது. அதாவது, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத பிற கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு தேவைப்பட்டது.
    ஆனால், தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. அதாவது, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் பாஜகவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியினால், குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜகவால் தனது விருப்பம் போல் வேட்பாளரை தேர்வு செய்ய முடியும்.
    குடியரசுத் தலைவர் பதவித் தேர்தலை பொறுத்தமட்டில், நாடாளுமன்ற இரு அவைகளைச் சேர்ந்த சம அளவு உறுப்பினர்கள் மற்றும் 29 மாநிலங்கள், தில்லி, புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்ட "எலெக்ட்டோரல் காலேஜ்' உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்.
    மகாராஷ்டிரம், குஜராத், ஹரியாணா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஏற்கெனவே ஆட்சியில் உள்ளது.
    ஜம்மு-காஷ்மீர், ஆந்திரம் ஆகிய 2 மாநிலங்களிலும் பாஜகவின் கூட்டணி கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), தெலுங்கு தேசம் (டிடிபி) ஆகியவை ஆட்சியில் உள்ளன. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
    குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு அளிக்கப்படும் வாக்குகளுக்கு, பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மதிப்பு அதிகமாகும். இதனால், குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜகவால் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
    குடியரசுத் தலைவராக பாஜகவால் தேர்வு செய்யப்படும் வேட்பாளர் பதவி வகிக்கும்பட்சத்தில், முக்கிய அரசியல் பிரச்னை எழும்போது அவரால் அக்கட்சிக்கு உதவி செய்ய முடியும். நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கும் தாமதமின்றி அவரிடம் இருந்து ஒப்புதல் கிடைத்து விடும்.
    குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலமும் நிறைவடைவதால், அப்பதவியிலும் பாஜகவைச் சேர்ந்தவரையோ அல்லது கூட்டணி கட்சியைச் சேர்ந்தோரையோ பாஜகவால் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய முடியும்.
    இதுதவிர்த்து, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு சட்டத்தை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கும், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில வெற்றி சாதகமாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.
    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் கிடைத்த வெற்றியின்மூலம், மாநிலங்களவைக்கு அதிக எண்ணிக்கையில் தனது கட்சியினரை அனுப்ப முடியும் என்று பாஜக நினைக்கிறது.
    அதாவது, மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாத இறுதியில் நிறைவடைகிறது. அப்போது பாஜக சார்பில் அதிக உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்ப வாய்ப்புள்ளது. இதன்மூலம் மாநிலங்களவையிலும் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு கடந்த 2002-ஆம் ஆண்டில் பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai