Enable Javscript for better performance
சசிகலா பதிலுக்கு நாளைக்குள் விளக்கம் அளிக்க ஓபிஎஸ் ஆதரவு அணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    சசிகலா பதிலுக்கு நாளைக்குள் விளக்கம் அளிக்க ஓபிஎஸ் ஆதரவு அணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

    By DIN  |   Published on : 13th March 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் வி.கே. சசிகலா அளித்துள்ள பதில் கடிதம் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அவருக்கு எதிராக புகார் தெரிவித்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியைச் சேர்ந்த டாக்டர் வா. மைத்ரேயனுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
    அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை, அக்கட்சியின் பொதுக் குழு தேர்வு செய்த நடைமுறை, கட்சி விதிகளுக்கு எதிரானது என்று டாக்டர் வா. மைத்ரேயன் தலைமையிலான 12 அதிமுக எம்.பி.க்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்துக்கு சசிகலா வெள்ளிக்கிழமை (மார்ச் 10) பதில் அனுப்பினார். தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளுக்குரிய விளக்கத்தை அவர் 70 பக்கங்களில் அளித்திருந்தார். அதில், "அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்த போது அவரால் 2012-இல் நீக்கப்பட்ட என்னை அடுத்த சில மாதங்களிலேயே கட்சித் தலைமை மீண்டும் சேர்த்துக் கொண்டது.
    அந்த வகையில் அந்த நீக்கல் நடவடிக்கை ரத்தாகி விட்டது. இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியாது என்று மனுதாரர்கள் (ஓபிஎஸ் அணி) சுமத்திய குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை.
    கட்சியின் பொதுக் குழுவில் எனது பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு முன்மொழிந்து கையெழுத்திட்ட அதே நபர்கள் (பன்னீர்செல்வம், மதுசூதனன்) தற்போது எதிராகக் குற்றம்சாட்டுகின்றனர்' என்பன உள்ளிட்ட விளக்கத்தை சசிகலா அளித்திருந்தார்.
    இந்நிலையில், நடைமுறை மரபுகளின்படி சசிகலா அளித்த விளக்கத்துக்கு புகார்தாரர் என்ற முறையில் கருத்து தெரிவிக்குமாறு டாக்டர் வா. மைத்ரேயனுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், செவ்வாய்க்கிழமைக்குள் (மார்ச் 14) பதில் அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai