Enable Javscript for better performance
பஞ்சாப்: 16-இல் அமரீந்தர் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    
    Amarinder-singh

    பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பத்னோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மலர்க்கொத்து வழங்கிய அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வரும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங்.

    பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் வரும் 16-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
    பஞ்சாபில் நடந்து முடிந்துள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 77 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
    ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி 18 இடங்களில் மட்டும் வென்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
    இந்நிலையில், சண்டீகரில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அமரீந்தர் சிங் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தில் நவ்ஜோத் சிங் சித்து, ராஜ்குமார் வெர்க்கா ஆகிய புதிய எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
    இதனிடையே, அவர் சண்டீகரில் உள்ள பஞ்சாப் ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் வி.பி.சிங் பத்னோரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன் பின், அமரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, மாநிலத்தில் புதிய அரசை அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக நான் வரும் 14-ஆம் தேதி தில்லி செல்ல உள்ளேன். புதிய அரசு பதவியேற்பு விழா வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
    புதிய அரசில் எத்தனை அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்பதைக் கூற இயலாது. மாநில அரசுக்குப் பொறுப்புடையதாக காங்கிரஸ் அரசு இருக்கும் என்றார் அமரீந்தர் சிங்.
    அவரைத் தொடர்ந்து, அமிருதசரஸ் மேற்கு தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார் வெர்க்கா கூறுகையில், "சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் செழித்து வளர்ந்துள்ள போதைமருந்துக் கடத்தலுக்கு முடிவு கட்டுவதே காங்கிரஸ் அரசின் முன்னுரிமைப் பணியாக இருக்கும். இதற்காக விரிவான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

    பிரகாஷ் சிங் பாதல் ராஜிநாமா

    பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததையடுத்து, முதல்வர் பதவியை பிரகாஷ் சிங் பாதல் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.
    பஞ்சாப் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிரோமணி அகாலி தளம் (15), பாஜக (3) கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து காங்கிரஸ் முதல்வர் பதவி வேட்பாளரான அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு விரைவில் பதவியேற்கவுள்ளது.
    சட்டப் பேரவை கலைப்பு: இதனிடையே, முதல்வர் பதவியிலிருந்து பிரகாஷ் சிங் பாதல் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் சட்டப் பேரவையை அந்த மாநில ஆளுநர் வி.பி. சிங் பட்னூர் ஞாயிற்றுக்கிழமை கலைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai