சுடச்சுட

  

  உத்தரகண்ட் மாநில முதல்வர் பதவிக்கு புதுமுக இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக சூசகமாக தெரிவித்துள்ளது.
  70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப் பேரவைக்கான தேர்தலில் பாஜக 57 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. தேர்தலின்போது முதல்வர் பதவிக்கு யாரையும் பாஜக முன்மொழியவில்லை. இதனால் முதல்வர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்று பாஜக ஆலோசித்து வருகிறது.
  உத்தரகண்ட் மாநில பாஜகவில் 4 முன்னாள் முதல்வர்கள், ஏராளமான இளம் தலைவர்கள் இருப்பதால் அவர்களில் ஒருவரை முதல்வராக தேர்வு செய்வது அக்கட்சிக்கு கடினமான பணியாக மாறியுள்ளது. இந்நிலையில், டேராடூனில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மூத்த தலைவரைக் காட்டிலும் இளைஞரே முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
  உத்தரகண்டில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசியதே காரணம் என்று கட்சி உறுதியாக நம்புகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது உத்தரகண்ட் மாநில மக்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறமையைக் கொண்ட ஒருவரையே முதல்வர் பதவிக்கு கட்சியின் ஆட்சிமன்றக் குழு தேர்வு செய்யும் என்றார் அவர்.
  உத்தரகண்ட் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர்கள் புவன் சந்திர கந்தூரி, பகத் சிங் கோஷியாரி, ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், விஜய் பகுகுணா; சட்டமன்ற உறுப்பினர்கள் சத்பால் மகராஜ், திரிவேந்திர சிங் ராவத், பிரகாஷ் பந்த் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. முதல்வர் பதவிக்கு இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ள நிலையில், கந்தூரி, கோஷியாரி, மகராஜ் ஆகியோரில் ஒருவர் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் கந்தூரிக்கு நேர்மையானவர் என்ற பெயர் உள்ளது. அதேநேரத்தில், கோஷியாரியோ ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். ஆதலால் இவர்கள் இருவருக்கு கூடுதல் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆன்மீகத் தலைவர் என்ற முறையில் உத்தரகண்டில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் மகராஜுக்கு செல்வாக்கு உள்ளது. மாநில பாஜக தலைவர் அஜய் பட்டுக்கு முதல்வராகும் வாய்ப்பு முதலில் அதிகமிருந்தது. ஆனால், சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் எதிர்பாராத வகையில் தோற்றுவிட்டதால் அந்த வாய்ப்பு குறைந்து விட்டது.
  ஜார்க்கண்ட் மாநில தேர்தல் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணகர்த்தாவான திரிவேந்திர சிங், முன்னாள் அமைச்சர் பிரகாஷ் பந்த், யஷ்பால் ஆர்யா, ஹரக் சிங் ஆகிய புதுமுகங்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai