Enable Javscript for better performance
கோவா முதல்வராக பாரிக்கரை நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு- Dinamani

சுடச்சுட

    

    கோவா முதல்வராக பாரிக்கரை நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

    By DIN  |   Published on : 14th March 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SC

    கோவா முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கரை அந்த மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா நியமித்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    மொத்தம் 40 இடங்களைக் கொண்ட கோவா மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை (21 இடங்கள்) கிடைக்கவில்லை.
    இந்நிலையில், தன்னை ஆதரிக்கும் 21 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் சமர்ப்பித்தார்.
    இதையடுத்து, பாரிக்கரை முதல்வராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    இந்நிலையில், தனிப்பெரும் கட்சியான தனக்கே ஆட்சியமைக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
    அந்த மனுவை கோவா சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் சார்பில் வழக்குரைஞர் தேவ்தத் காமத், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹரின் இல்லத்துக்கே திங்கள்கிழமை மாலை நேரில் சென்று தாக்கல் செய்தார். அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
    கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அரசியல்சாசன மரபுகளின்படி தனிப்பெரும் கட்சியையே ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்து, பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
    இந்நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த பாஜகவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைத்திருப்பது அரசியல்சாசனத்துக்கு எதிரான நடவடிக்கை மட்டுமன்றி, சட்ட விரோதமானதும் ஆகும்.
    எனவே, மனோகர் பாரிக்கரை முதல்வராக நியமித்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்வதோடு, பாரிக்கர் முதல்வராகப் பதவியேற்கவும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    அதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அதை அவசரமாக விசாரிக்க ஒப்புக் கொண்டார். உச்ச நீதிமன்றத்துக்கு தற்போது ஹோலி பண்டிகைக்காக விடுமுறை என்பதால், மேற்கண்ட மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
    மனுதாரர் சார்பில் வழக்குரைஞரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் சிங்வி வாதிட உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஆளுநருக்கு காங்கிரஸ் மனு: இதனிடையே, தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைப்பதற்கு தன்னை அழைக்குமாறு கோவா ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை இரவு மனு ஒன்றை அளித்தது.
    அதில், ஆட்சி அமைக்கத் தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அதை சட்டப் பேரவையில் தங்களால் நிரூபிக்க முடியும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
    "ஆளுநர் செய்தது சரிதான்': இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
    தொங்கு சட்டப் பேரவை உருவாகும்போது, பெரும்பான்மை பலத்தைக் கொண்ட கூட்டணியின் தலைவரை ஆட்சி அமைக்க வருமாறு அழைத்து, குறுகிய காலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கோருவது அரசியல்சாசனப்படி சரியானதுதான் என்று அந்தப் பதிவில் ஜேட்லி கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai