சுடச்சுட

  
  manoharparikar

  கோவா முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார். அவருடன் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் உள்பட 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
  கோவா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிகபட்சமாக காங்கிரஸ் 17-இல் வெற்றி பெற்றது.
  பாஜக 13 இடங்களில் வென்றது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தலா 3 இடங்களில் வென்றனர். தேசியவாத காங்கிரஸ் ஓரிடத்தில் வென்றது.
  பெரும்பான்மை பெற்ற பாஜக: இதனிடையே, பாரிக்கர் முதல்வராக வேண்டுமென்ற நிபந்தனையுடன், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி மற்றும் இரு சுயேச்சை வேட்பாளர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து பாஜகவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 21 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தது.
  இந்நிலையில், ஆளுநர் மிருதுளா சின்ஹாவை பாரிக்கர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, பாரிக்கரை முதல்வராக ஆளுநர் நியமனம் செய்தார். மேலும் சட்டப் பேரவையில் 15 நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
  8 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்: இதையடுத்து, கோவா முதல்வராக பாரிக்கர் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அவருடன் மேலும் 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். பாஜக, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்எல்ஏக்களும், 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்கலாம் எனத் தெரிகிறது.
  இதில் பாஜக சார்பில் அமைச்சர்களாக பதவியேற்கும் 2 பேரில் தற்போதைய துணை முதல்வர் பிரான்சிஸ் டி சௌசா ஒருவராவார். மற்றொருவரின் பெயர் செவ்வாய்க்கிழமை காலையில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவா மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் தெரிவித்தார். அமைச்சரவை விரிவாக்கத்தின்போது மேலும் 3 அல்லது 4 கேபினட் அமைச்சர் பதவிகள் நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  பாதுகாப்பு அமைச்சர் பதவி ராஜிநாமா

  கோவா மாநில முதல்வர் பதவியை ஏற்பதற்கு வசதியாக தாம் வகித்து வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை பாரிக்கர் ராஜிநாமா செய்தார்.
  இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
  எனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்துவிட்டேன். கோவா முதல்வராக செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளேன். என்னுடன் கேபினட் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
  பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி முதலில் சற்று கடினமாகவே இருந்தது. ஆனால், பின்னர் சிறப்பாகப் பணியாற்றினேன். பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி என்பது எப்போதுமே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கு உள்ளாவதாக இருந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகால எனது பதவிகாலத்தில் ராணுவத் தளவாடங்கள் வாங்குவது உள்பட எந்தக் கொள்முதலிலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீதோ அல்லது என்மீதோ ஒரு குற்றச்சாட்டு கூட எழவில்லை.
  பாதுகாப்புத் துறை அமைச்சராக நான் செய்த சாதனைகளாக, ராணுவ வீரர்களிடையே மனஉறுதியை அதிகரித்தது, சிறப்பான ஆயுதத்தளவாட கொள்முதல் செய்தது ஆகியவற்றையே குறிப்பிடுவேன். எனது பதவி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆயுத கொள்முதலில், அரசுக்கு பலகோடி ரூபாய் பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றார் பாரிக்கர்.


  4-ஆவது முறையாக முதல்வர்

  61 வயதுள்ள பாரிக்கர், மும்பை ஐஐடி-யில் படித்தவர். கடந்த 2012-ஆம் ஆண்டு கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை மீண்டும் வெற்றி பெறவைத்து முதல்வராக பதவியேற்றார். எனினும், 2014-ஆம் ஆண்டு அவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரானார். அவருக்குப் பதிலாக லட்சுமிகாந்த் பர்சேகர் கோவா முதல்வரானார். ஆனால், அவரால் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
  பாரிக்கர் இப்போது 4-ஆவது முறையாக கோவா முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார். இதற்கு முன்பு 2000-2002, 2002-2005, 2012-2014 ஆண்டுகள் என மூன்று முறை கோவா முதல்வராக பதவி வகித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai