சுடச்சுட

    

    தில்லியில் இறந்த தமிழக மாணவருக்கு இன்று பிரேதப் பரிசோதனை

    By DIN  |   Published on : 14th March 2017 11:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    muthu

    தில்லி ஜவாஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ஆராய்ச்சி மேல்படிப்பு (பிஹெச்டி) பயின்று வந்த சேலம் மாணவர் முத்துகிருஷ்ணனின் (29) பிரேத பரிசோதனை புதன்கிழமை (மார்ச் 15) நடைபெறவுள்ளது.
    ஆராய்ச்சி மாணவர்: முத்துகிருஷ்ணன் உயிரிழந்தது தொடர்பாக ஆரம்பநிலை விசாரணை நடத்திய தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையர் ஈஸ்வர் சிங் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 2015-இல் எம்.பில் படித்து பின்னர் ஆராய்ச்சி மேல்படிப்புக்காக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு சேர்ந்துள்ளார். பல்கலைக்கழகத்தின் ஜீலம் விடுதியில் தங்கியிருந்தார்.
    கடந்த திங்கள்கிழமை விடுதிக்கு அருகே உள்ள முனீர்கா விஹார் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு மதிய உணவுக்காக முத்துகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது சோர்வுடன் காணப்பட்ட அவர், சிறிது நேரம் படுத்துக் கொள்வதாகக் கூறி ஓர் அறைக்குள் சென்று அதன் கதவை உள்பக்கம் தாழிட்டுள்ளார். பிற்பகல் 2 மணியளவில் உள்ளே சென்றவர் மாலை 4.30 மணியளவில் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாலை 5 மணியளவில் தகவல் அளித்தனர்.
    அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ பகுதிக்கு வந்து தாழிடப்பட்ட அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின் விசிறி கம்பியில் துணியால் தூக்கிட்ட நிலையில் முத்துகிருஷ்ணன் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
    துப்பு கிடைக்கவில்லை: சம்பவ இடத்தில் தற்கொலைக்கான கடிதம் எதையும் முத்துகிருஷ்ணன் எழுதி வைத்ததாகத் தெரியவில்லை. ஜேஎன்யு விடுதியில் அவர் தங்கியிருந்த அறையிலும் துப்பு கிடைக்கவில்லை.அவரது முகநூல் பக்கத்தில் மார்ச் 10-ஆம் தேதி எழுதிய பதிவில், "பல்கலைக்கழகத்தில் பிஎச்டி, எம்.பில் மாணவர் சேர்க்கையில் பாரபட்சம் காட்டப்படுகிறது. வெளிப்படைத் தன்மை இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முத்துகிருஷ்ணன் தங்கியிருந்த அறை, அவருடன் படிக்கும் நண்பர்கள் ஆகியோரிடம் விசாரித்து வருகிறோம் என்றார் ஈஸ்வர் சிங்.
    தந்தை கோரிக்கை: இதற்கிடையே, மாணவர் முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், தனது குடும்ப உறவினர்களுடன் தில்லிக்கு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த அவர்களிடம் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், "எனது மகனின் சாவில் மர்மம் உள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை மகனின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள மாட்டேன்' என்று ஜீவானந்தம் கூறினார்.
    இதையடுத்து, முறைப்படி புகார் அளித்தால் மட்டுமே பிரேதப் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்க முடியும் என தில்லி காவல் துறையின் துவாரகா சரகத்தில் துணை ஆணையராகப் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சி.மனோஜ் மூலம் காவல் துறை உயரதிகாரிகள் சமாதானம் பேசினர். இதைத் தொடர்ந்து, ஜீவானந்தத்தின் புகார் முறைப்படி பெறப்பட்டது. பின்னர், முத்துகிருஷ்ணனின் பிரேதப் பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவர்கள் ஐந்து பேர் கொண்ட குழு புதன்கிழமை நடத்த முடிவெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்ததும் முத்துகிருஷ்ணனின் உடலையும் அத்துடன் அவரது தந்தை உள்ளிட்ட மூன்று உறவினர்களையும் அரசு செலவில் விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    தலைவர்கள் ஆறுதல்: தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் எஸ்.முத்துக்கருப்பன், ஏ.விஜயகுமார், கே.காமராஜ் (அதிமுக); டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), டி.ராஜா (சிபிஐ), தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், தென்னிந்திய நலக் கழகத்தின் தங்கவேலு ஆகியோர் பாதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.
    இந்த விவகாரத்தில் உயிரிழந்த மாணவரின் தந்தை மற்றும் உறவினர்கள்; ஹைதராபாதில் முத்துகிருஷ்ணன் படித்த கல்லூரியுடன் தொடர்புடைய ஆர்வலர்கள்; தில்லி ஜேஎன்யு மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவு மாணவர்கள் ஆகியோர் மூன்று குழுக்களாக முத்துகிருஷ்ணன் சாவுக்கு நீதி கோரி வருகின்றனர்.
    இரண்டாவது சம்பவம்: கடந்த ஆண்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மேல் படிப்பில் சேர்ந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மர்மமான முறையில் வலது கை மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் தில்லியில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai