Enable Javscript for better performance
பாகிஸ்தான் 2-ஆவது நாளாக தாக்குதல்: எல்லையில் பேருந்து சேவை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தான் 2-ஆவது நாளாக தாக்குதல்: எல்லையில் பேருந்து சேவை நிறுத்தம்

    By DIN  |   Published on : 14th March 2017 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Terrorist (4)

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவ்லாகோட் இடையேயான பேருந்து சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    இதுகுறித்து, ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
    பூஞ்ச் பகுதியிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவப் படையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பீரங்கிகளையும், தானியங்கி துப்பாக்கிகளையும் பயன்படுத்தி அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, அவர்களுக்கு நமது படை வீரர்கள் தகுந்த பதிலடியைக் கொடுத்தனர். இதில், இந்திய தரப்பில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்றார் அவர்.
    முன்னதாக, பூஞ்ச் மாவட்டம், கிருஷ்ணா காட்டி நகரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படையினர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதேபோல், கடந்த 9-ஆம் தேதி பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
    மத்திய அமைச்சர் கண்டனம்: பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்தியுள்ள தாக்குதலுக்கு மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக, தில்லியில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: இந்தியாவில் எந்தவொரு பண்டிகை கொண்டாடப்படும்போதும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே திடீர் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் தனது வழக்கமாகக் கொண்டுள்ளது.
    பொதுவாக, ஹோலி பண்டிகையின்போது தீய சக்திகளை வேரறுப்போம் என்று உறுதியேற்பது வழக்கம். அதேபோன்ற உறுதியுடன் தான், எல்லைப் பகுதியை நமது படை வீரர்கள் காத்து வருகின்றனர் என்றார் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர்.
    பேருந்து சேவை நிறுத்தம்: பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச் - ராவ்லாகோட் இடையேயான பேருந்து சேவை திங்கள்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai