சுடச்சுட

    

    ஆந்திர எம்எல்ஏ மறைவுக்கு இரங்கல்: ஜெகன்மோகன்-சந்திரபாபு நாயுடு பரஸ்பரம் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 15th March 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்தில் எம்எல்ஏ பூமா நாகிரெட்டியின் மறைவுக்கு அந்த மாநில சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் புறக்கணித்தது தொடர்பாக அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
    ஆந்திரத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியால் தொகுதியில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூமா நாகிரெட்டி(53). அவர் கடந்த ஆண்டு (2016) அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
    இந்நிலையில், பூமா நாகிரெட்டி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமையன்று அவைத் தலைவர் தீர்மானம் ஒன்றை வாசித்தார். பின்னர் அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
    முன்னதாக, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதில் பங்கேற்காமல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் அவையைப் புறக்கணித்தனர். இது தொடர்பாக சட்டப் பேரவை வளாகத்தில் அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    பூமா நாகிரெட்டியை மூன்றே தினங்களில் அமைச்சராக்குவதாக ஆசைகாட்டி கடந்த ஆண்டு எங்கள் கட்சியில் இருந்து சந்திரபாபு நாயுடுதான் அழைத்துச் சென்றார். ஆனால், ஓராண்டு கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நாயுடு நிறைவேற்றாததால், நாகிரெட்டி கடும் மன அழுத்தத்தில் இருந்தார். இதுவே அவரது மறைவிற்குக் காரணமானது. நான் பேரவைக்குச் சென்றிருந்தால் சில உண்மைகளைக் கூற வேண்டியிருக்கும். மறைந்த தலைவரின் கண்ணியத்தைக் காக்கவே நான் அதைத் தவிர்த்து விட்டேன் என்றார் ஜெகன்மோகன்.
    நாயுடு பதிலடி: இதனிடையே, அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "நாகிரெட்டியை அமைச்சராக்க விடாமல் தடுப்பதற்காக ஆளுநரைச் சந்தித்து புகார் கூறியதே ஜெகன்மோகன்தான். நாகிரெட்டிக்கு மன அழுத்தம் ஏற்பட அவர்தான் காரணம். எம்எல்ஏவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மனிதாபிமானம் கூட ஜெகன்மோகனுக்கு இல்லை' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai